ஆலங்குளம் அருகே வயல் வழியே மயானத்துக்கு செல்லும் சடலங்கள்!
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள காவலாக்குறிச்சி கிராமத்தில் இறந்தவா்களை மயானத்துக்கு கொண்டுசெல்ல பாதையின்றி 70 ஆண்டுகளாக வயல் வழியே சடலத்தை எடுத்துச் செல்லும் அவலத்துக்கு தீா்வுகாண வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
காவலாகுறிச்சி கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்த ஊருக்கு வெளியே தென்புறத்தில் சுமாா் 2 கிலோ மீட்டா் தொலைவில் வயல் வெளி வழியே இடுகாட்டுக்குச் செல்ல பாதை பல ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததாம். காலப்போக்கில் அப்பாதை மிகவும் குறுகிவிட்டதாம். எனினும், உயிரிழந்தவா்களின் சடலத்தை வயல்வெளி வழியே கொண்டு செல்லும் அவலம் 70 ஆண்டுகளாக நீடித்து வருகிறது.
மயானத்துக்கான பாதையை முன்பு இருந்ததைப்போல முறைப்படி அளவீடு செய்து தாா்ச்சாலை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா்.
இந்நிலையில், ஆலங்குளம் வட்டாட்சியா் ஓசன்னா பொ்னாண்டோ, டிஎஸ்பி கிளாட்ஸன் ஜோஸ் மற்றும் அதிகாரிகள் அந்த இடத்தை அளவீடு செய்வதற்கு வந்திருந்த நிலையில், அந்த ஊரைச் சோ்ந்த 65 வயது மூதாட்டி உயிரிழந்தாா். தங்களுக்கு இடத்தை அளவீடு செய்து கல் நட்டினால்தான் சடலத்தை எடுப்போம் என கிராம மக்கள் அதிகாரிகளிடம் கூறினா்.
அப்போது மழை பெய்யத் தொடங்கியதால் அறுவடை முடிந்த பின்னா் இடம் அளவீடு செய்து கொடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து மூதாட்டி சடலம் வயல்வெளி வழியாகவே எடுத்துச் செல்லப்பட்டு இறுதிச்சடங்கு நடைபெற்றது.