ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த குழந்தை! 3வது நாளாக தொடரும் மீட்புப் பணி!
ராஜஸ்தான் மாநிலத்தில் ஆழ்துளைக் கிண்ற்றுக்குள் விழுந்த குழந்தையை மீட்கும் பணி இன்று (டிச.25) மூன்றாவது நாளாக தொடர்கிறது.
கோட்புட்லி- பெஹ்ரோர் மாவட்டத்தைச் சேர்ந்த சேத்துனா (வயது 3) என்ற பெண் குழந்தை, கடந்த திங்களன்று (டிச.23) சாருண்டு பகுதியிலுள்ள தனது தந்தைக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக அருகிலிருந்த 150 அடி ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்தது.
இதனைத் தொடர்ந்து அங்கு வரவழைக்கப்பட்ட மீட்புக்குழுவினர் தற்காலிக கருவிகளைக் கொண்டு குழந்தையை மீட்க முயற்சித்தனர். அதன் மூலம் வெறும் 30 அடி அளவிற்கு மட்டுமே குழந்தையை மேலே கொண்டுவர முடிந்தது.
இந்நிலையில் நேற்று (டிச.24) இரவோடு குழந்தையை மீட்கப் பயன்படுத்தப்பட்ட நான்கு தற்காலிக முறைகளும் தோல்வியடைந்ததினால், இயந்திரம் மூலம் தோண்டும் பணித் துவங்கியுள்ளது.
இதையும் படிக்க: பாலத்திலிருந்து 3.6 கிலோ வெடி பொருள் கைப்பற்றல்!
இதுகுறித்து தேசிய பேரிடர் மீட்புப் படை அதிகாரி ஒருவர் கூறுகையில், குழந்தை தவறி விழுந்த ஆழ்துளைக் கிணற்றுக்கு அருகில் 150 அடி ஆழத்திற்கு மற்றொரு குழி தோண்டவுள்ளதாகவும், அதிலிருந்து குழந்தைக்கு நேராக சுரங்கம் ஒன்று தோண்டி குழந்தையை மீட்கவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது 120 அடி ஆழத்தில் J வடிவ கொக்கியைக் கொண்டு பிடிக்கப்பட்டிருக்கும் குழந்தை சேத்துனாவின் உடலில் நேற்று காலையிலிருந்து அசைவுகள் எதுவும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆழ்துளைக் கிண்ற்றுக்குள் சிக்கியுள்ள குழந்தையின் தாத்தா ஹர்ஷியா சவுதாரி, மீட்புக் குழுவினர் 28 மணிநேரங்கள் கழித்தே தோண்டுவதற்கு முடிவு செய்துள்ளதாகவும், அவர்கள் அலட்சியப் போக்குடன் செயல்படுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.