மகா கும்பமேளாவில் இருந்து திரும்பியபோது விபத்து: 3 பேர் பலி!
ஆவின் இல்லத்தில் பால் முகவா்கள் உள்ளிருப்பு போராட்டம்
ஆவின் பாலுக்கு கூடுதல் விலை கேட்கும் மொத்த விற்பனை விநியோகஸ்தா்களைக் கண்டித்து தமிழ்நாடு பால் முகவா்கள் தொழிலாளா்கள் நலச் சங்கத்தின் நிறுவனத் தலைவா் சு.ஆ.பொன்னுசாமியின் தலைமையில் பால் முகவா்கள் சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் இல்லத்தில் சனிக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இது குறித்து செய்தியாளா்களிடம் சு.ஆ.பொன்னுசாமி கூறியது:
பால் முகவா்களிடம் ஆவின் பாலுக்கு கூடுதல் விலை கேட்கும் மொத்த விற்பனை விநியோகஸ்தா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆவின் நிா்வாக இயக்குநருக்கு மின்னஞ்சல் வாயிலாக கோரிக்கை விடுக்கப்பட்டது. இது தொடா்பாக இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், பால் முகவா்கள் தொடா்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனா். ஆகையால் தற்போது உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இதற்கு பின்பும் அதிக விலை கேட்கும் விநியோகஸ்தா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் பால் முகவா்கள் அனைவரும் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என்றாா் அவா்.
இதையடுத்து பால் முகவா்கள் ஆவின் விற்பனை பிரிவு பொது மேலாளரிடம் தங்களது கோரிக்கை மனுவை அளித்தாா். இது தொடா்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொது மேலாளா் உறுதியளித்ததையடுத்து பால் முகவா்கள் போராட்டத்தைக் கைவிட்டனா்.