நீா்நிலைகளில் குப்பைகளைக் கொட்டுவதை தடுக்க வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல்
ஆஸி.க்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு இந்தியா தயாரா? இந்தியாவுக்கு காத்திருக்கும் சவால்கள் என்ன?
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் - கவாஸ்கர் தொடரில் இந்தியாவுக்கு பல்வேறு சவால்கள் காத்திருக்கின்றன.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் வலுவாக முதலிடத்தில் நீடித்து வந்த இந்திய அணி, நியூசிலாந்துக்கு எதிரான வரலாற்று தோல்விக்குப் பிறகு சரிவை சந்தித்தது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் சரிவை சந்தித்தது ஒருபுறமிருக்க, நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் இந்திய அணியின் செயல்பாடுகள் குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்தன.
நியூசிலாந்துக்கு எதிரான தொடரின்போது, இந்திய அணி பேட்டிங்கில் மிகவும் மோசமாக செயல்பட்டது. வரலாற்று தோல்விக்குப் பிறகு, மிக முக்கிய தொடரான பார்டர் - கவாஸ்கர் தொடரில் இந்திய அணி விளையாடவுள்ளது. இந்தத் தொடரில் இந்திய அணி தன்னை நிரூபித்துக் கொள்ளும் கட்டாயத்தில் உள்ளது.
இதையும் படிக்க: ஆஸி.க்கு எதிரான தொடரில் இவர்கள் இருவரும் மிக முக்கியம்: இந்திய முன்னாள் வீரர்
பார்டர் - கவாஸ்கர் தொடரில் இந்திய அணிக்கு காத்திருக்கும் சவால்கள் பின்வருமாறு,
ரோஹித் சர்மா, விராட் கோலியின் ஃபார்ம்
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் சிறப்பாக செயல்படத் தவறினர். இந்திய அணிக்காக கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பான பங்களிப்பை அளித்து இந்திய அணி வெற்றி பெற காரணமாக இருந்த இவர்களின் பேட்டிங் ஃபார்மின் மீது சந்தேகம் எழுந்துள்ளது.
நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா 133 ரன்களும், விராட் கோலி 192 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இதன் மூலம், அவர்களது பேட்டிங் ஃபார்ம் விமர்சனத்துக்குள்ளானது. இந்த தொடரில் அவர்களது சராசரி முறையே 13.30, 21.33 ஆக உள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடர் இந்தியாவுக்கு மிகவும் முக்கியமானதாகும். இந்த தொடரில் 4-1 என ஆஸ்திரேலியாவை வீழ்த்தினால் மட்டுமே இந்திய அணியால் தரவரிசைப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களுக்குள் இடம்பிடித்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற முடியும்.
இதையும் படிக்க: ஆண் குழந்தைக்குத் தந்தையானார் டிராவிஸ் ஹெட்!
பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரை அவர்களது சொந்த மண்ணில் வெல்ல வேண்டுமென்றால், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் பெரிய இன்னிங்ஸ் விளையாட வேண்டும் என்பது அவசியம்.
பந்துவீச்சாளர்கள் தேர்வு
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வருகிற நவம்பர் 22 ஆம் தேதி பெர்த்தில் தொடங்குகிறது. இந்தப் போட்டியில் இந்திய அணி ஆடுகளத்தை கணித்து சரியான பந்துவீச்சாளர்களுடன் களம் காண வேண்டும்.
பெர்த் மைதானத்தில் ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்துவீச்சாளரான நாதன் லயன் சிறப்பாக செயல்பட்டுள்ளார். அவர் பெர்த் மைதானத்தில் 27 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். இந்திய அணியில் தரமான சுழற்பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். அதனால், இந்திய அணி சரியான பந்துவீச்சாளர்களுடன் முதல் போட்டியில் களமிறங்க வேண்டும்.
பேட்டிங் ஆர்டரில் தெளிவு வேண்டும்
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் கடைசி இரண்டு போட்டிகளின்போது, இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரில் நிறைய மாற்றங்களைக் காண முடிந்தது. சில நேரங்களில் வலதுகை மற்றும் இடதுகை பேட்ஸ்மேன்கள் களத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக சில முடிவுகள் எடுக்கப்பட்டன. ஆனால், மும்பை டெஸ்ட்டில் இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் தெளிவின்றி இருந்தது.
இதையும் படிக்க: இந்தியாவுக்காக ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி ஹைபிரிட் மாடலில் நடத்தப்படுகிறதா?
முதல் டெஸ்ட் போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி 150 ரன்கள் எடுத்த சர்ஃபராஸ் கான், அவரது கடைசி 3 இன்னிங்ஸ்களில் வெவ்வேறு இடங்களில் களமிறங்கினார். இது அவருடைய பேட்டிங்கை பெரிதும் பாதித்தது. அவரது கடைசி 3 இன்னிங்ஸ்களில் வெறும் 10 ரன்கள் மட்டுமே சேர்த்தார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி எந்த மாதிரியான அணுகுமுறையை பின்பற்றப் போகிறது என்பது தெரியவில்லை. அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தாத விதமாகவும், பேட்ஸ்மேன்களின் ஃபார்மை பாதிக்காத வகையிலும் இந்திய அணி நிர்வாகத்தின் முடிவுகள் இருந்தால் நன்றாக இருக்கும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு.
பிரதான சுழற்பந்துவீச்சாளர் யார்?
இந்திய ஆடுகளங்களைப் போன்று ஆஸ்திரேலிய ஆடுகளங்கள் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமானதாக இருக்காது. வேகப் பந்துவீச்சாளர்கள் மற்றும் சுழற்பந்துவீச்சாளர்கள் என இருவருமே சிறப்பாக செயல்பட முடியும். இந்த சூழலில் இந்திய அணி பிளேயிங் லெவனில் 3 சுழற்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்குவது கடினம். அதனால், இந்திய அணியின் பிளேயிங் லெவனின் பிரதான சுழற்பந்துவீச்சாளர் யார் என்பதை முடிவு செய்ய வேண்டும்.
இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர்களில் ஒருவரான ரவீந்திர ஜடேஜா கடந்த இரண்டு முறை ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோதும், சிறப்பாக செயல்பட்டுள்ளார். அந்த பயணங்களின்போது, 14 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான கடைசி இரண்டு போட்டிகளில் அணியில் சேர்க்கப்பட்ட தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் 16 விக்கெட்டுகளைக் கைப்பற்றி சிறப்பாக செயல்பட்டார். டெஸ்ட் போட்டிகளில் 500-க்கும் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்தி பரந்த அனுபவத்துடன் ரவிச்சந்திரன் அஸ்வினும் இருக்கிறார்.
இதையும் படிக்க: ஐபிஎல் தொடரில் விளையாட ஜேம்ஸ் ஆண்டர்சன் திடீரென ஆர்வம் காட்ட காரணம் என்ன?
இவர்கள் மூவருமே பந்துவீச்சு ஆல்ரவுண்டர்கள். இவர்களில் யாரை இந்திய அணி பிரதான சுழற்பந்துவீச்சாளராக களமிறக்கப் போகிறது என்பது மிகவும் முக்கியம்.
முகமது சிராஜின் ஃபார்ம்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மூத்த பந்துவீச்சாளர்களில் ஒருவரான முகமது ஷமி காயம் காரணமாக அணியில் இடம்பெறவில்லை. வேகப் பந்துவீச்சைப் பொருத்தவரையில், ஜஸ்பிரித் பும்ரா பிரதான பந்துவீச்சாளராக பிளேயிங் லெவனில் இடம்பெறுவார். ஆகாஷ் தீப் சிறப்பாக பந்துவீசி வருகிறார். ஆனால், முகமது சிராஜின் ஃபார்ம் இந்திய அணிக்கு கவலையளிப்பதாக உள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுக போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட முகமது சிராஜ் 13 விக்கெட்டுகளை வீழ்த்தி கவனம் பெற்றார். ஆனால், அண்மையில் இந்தியாவில் நடந்து முடிந்த நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் சிறப்பாக செயல்பட்டு விக்கெட்டுகளை வீழ்த்த தவறினார்.
கடைசியாக விளையாடிய 4 போட்டிகளில் 42.33 சராசரியுடன் சிராஜ் வெறும் 6 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் மீண்டும் ஃபார்முக்குத் திரும்ப வேண்டிய நெருக்கடியில் சிராஜ் இருக்கிறார்.
பந்துவீச்சில் ஜஸ்பிரித் பும்ரா, ஆகாஷ் தீப் மற்றும் முகமது சிராஜை தவிர்த்து, டெஸ்ட் போட்டிகளில் அதிகம் விளையாடிய அனுபவம் இல்லாத வேகப் பந்துவீச்சாளர்களான பிரஷித் கிருஷ்ணா, ஹர்ஷித் ராணா மற்றும் நிதீஷ் ரெட்டி ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் மூவரில் பிரஷித் கிருஷ்ணா மட்டுமே இதற்கு முன்பு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
இதையும் படிக்க: ஒருநாள் போட்டிகளில் ஓய்வை அறிவித்த ஆப்கன் வீரர்!
வெற்றிப் பாதைக்கு திரும்புமா இந்தியா?
பார்டர் - கவாஸ்கர் தொடரில் விளையாடவுள்ள இந்திய அணிக்கு இத்தனை சவால்கள் உள்ளன. நியூசிலாந்துக்கு எதிரான வரலாற்று தோல்வியிலிருந்து மீண்டு, மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பியாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது. இந்திய அணியின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கனவும் இந்த தொடரில் அடங்கியுள்ளது. பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த சவாலை எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.