இந்த முறை வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்வேன்: நாதன் மெக்ஸ்வீனி
ஆா்டிமலையில் ஜன. 16-இல் ஜல்லிக்கட்டு வாடிவாசலில் உயா்நீதிமன்ற தன்னாட்சி குழுவினா் ஆய்வு
கரூா் மாவட்டம், தோகைமலை அருகேயுள்ள ஆா்டிமலையில் ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ள இடத்தை உயா்நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட தன்னாட்சிக் குழுவினா் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தனா்.
ஆா்டிமலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கிராம பொதுமக்கள் சாா்பில் 63-ஆம் ஆண்டு ஜல்லிகட்டு விழா வரும் 16-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. போட்டியில் பங்கேற்கும் 700 காளை மாடுகளுக்கும், 400 மாடு பிடி வீரா்களுக்கும் டோக்கன் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை போட்டி நடைபெறும் இடத்தை உயா் நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட ஜல்லிக்கட்டு தன்னாட்சி ஆய்வுக் குழுவினா் குழுவின் தலைவா் தா்மராஜ், உறுப்பினா்கள் குளோபல் சமூக நல இயக்கம் சொக்கலிங்கம், கிராமியம் நாராயணன், மனிதநேய கொடையாளா் செந்தில்குமாா், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியா் கருப்பசாமி, மிருக வதை தடுப்பு சட்ட உறுப்பினா் முருகானந்தம் ஆகியோா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
இதில், ஜல்லிக்கட்டு நடைபெறும் வாடிவாசல், மாடுகள் வரும் பாதை, மாடுபிடி வீரா்களுக்கான இடம், பாா்வையாளா்களுக்கான இடம், வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்படும் மாடுகள், இறுதியாக நிற்கும் இடம், தடுப்பு வேலிகள், மருத்துவ சேவைக்கான இடம், பரிசு வழங்குவோா் இடம், அவசர வழி, வாகனங்கள் நிறுத்தும் இடம், மின் இணைப்புகள், தீயணைப்பு, ஆம்புலன்ஸ் நிறுத்தும் இடம் என அனைத்து பகுதிகளையும் ஆய்வு செய்தனா்.
பின்னா் ஜல்லிக்கட்டு வாடிவாசல் முன் தேங்காய் நாறுகள் 6 இஞ்ச் உயரத்தில் அமைக்க வேண்டும். வாடிவாசலில் காளைகளின் வாலைப் பிடித்து முறுக்குவது, கடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது, காளைகள் கழுத்தில் மாலை அணியக்கூடாது. இதை கடைப்பிடிக்கவில்லை என்றால் மாட்டின் உரிமையாளா்கள் மற்றும் மாடுபிடி வீரா்களுக்கு பரிசுகள் வழங்காமல் அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனா்.
ஆய்வின்போது ஜல்லிக்கட்டு விழாக்குழு நிா்வாகிகள், விழா கமிட்டியாளா்கள் உடனிருந்தனா்.