இடிந்த கோயில் சுவரின் கட்டுமானத்தில் ஊழல்: மார்க்சிய கம்யூனிஸ்ட் குற்றச்சாட்டு
விசாகப்பட்டினத்தில் இடிந்து விபத்தான சுவரின் கட்டுமானத்தில் ஊழல் நடந்திருப்பதாக மாநில அரசை மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
ஆந்திரம் மாநிலம், சிம்மாச்சலத்தில் உள்ள ஸ்ரீ வராஹ லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் சுவர் இடிந்து விழுந்து விபத்தானதில் 8 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், இந்த விபத்தில் பலியானவர்களுக்கு நிதி உதவியாக தலா ஒரு கோடி ரூபாய் வழங்குமாறு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, உயிரிழந்தவர்களில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கூறியதாவது, கோயில் சுவர் இடிந்த விபத்தின் காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியாகினர். அவர்களில் கணவர், மனைவி இருவரும் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களாக இருந்தனர். தற்போது, எங்கள் குடும்பத்துக்கு நீதி வேண்டும். தூண் இல்லாமல் சுவரை எப்படி எழுப்ப முடியும்? என்று கட்டுமானத்தின் ஒப்பந்ததாரர் மற்றும் பொறியாளரிடம் கேட்க வேண்டும்.
இவ்வாறான மோசமான கட்டுமானத்தில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் ஒரே நேரத்தில் உயிரிழந்தனர். தற்போது, எங்கள் குடும்பத்தின் பொறுப்பை யார் ஏற்றுக்கொள்வார்கள்? உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் நிவாரண நிதியுதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையையும் அரசு அறிவிக்க வேண்டும். அரசு அறிவிக்கவில்லையெனில், பலியானவர்களின் உடல்களை உடற்கூறாய்வுக்கு அனுமதிக்க மாட்டோம் என்று தெரிவித்தனர்.
இதனிடையே, இடிந்து விபத்தினை ஏற்படுத்திய சுவரின் கட்டுமானத்தில் தெலுங்கு தேசம் மற்றும் ஜனசேனை கட்சியைச் சேர்ந்தவர்கள்தான் ஈடுபட்டிருக்கின்றனர் என்று மாநில அரசை மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
மேலும், இந்த விபத்துக்கு மாநில அரசின் அலட்சியம்தான் காரணம் என்று கூறியதுடன், கட்டுமானத்தில் லட்சக்கணக்கில் ஊழல் நடந்திருப்பதாகவும் தெரிவித்தனர்.
ஆந்திரம் மாநிலம், சிம்மாச்சலத்தில் உள்ள ஸ்ரீ வராஹ லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் சந்தன உற்சவத்தில் இறைவனின் நிஜரூப தரிசனத்தைக் காண புதன்கிழமை அதிகாலை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடியிருந்தனர்.
இந்த நிலையில், இரவு முழுவதும் பெய்த பலத்த மழை மற்றும் பலத்த காற்று காரணமாக கோயில் சுவர் அதிகாலை 3 மணியளவில் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 8 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 25 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படுவதாக அம்மாநில அரசும், பிரதமரின் நிவாரண நிதியிலிருந்து ரூ. 2 லட்சமும் வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடியும் அறிவித்துள்ளார்.
இதையும் படிக்க:பாகிஸ்தானில் 10 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!