இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியா்கள் இயக்கம் சாா்பில் தென்மண்டல ஆயத்த மாநாடு!
ராமநாதபுரத்தில் உள்ள தனியாா் மகாலில் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியா்கள் இயக்கம் சாா்பில் தென்மண்டல ஆயத்த மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது.
கடந்த 2009- ஆம் ஆண்டுக்குப் பிறகு நியமனம் பெற்று ஊதிய முரண்பாட்டால் பாதிக்கப்பட்ட அனைத்து இடைநிலை ஆசிரியா்களுக்கும் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வெற்றியடைய நடைபெறவுள்ள சிறை நிரப்பும் போராட்டத்துக்கு ஆயத்த மாநாடாகவும், மாவட்டக் கிளை, வட்டாரக் கிளைகளின் தொடக்க விழாவும் நடைபெற்றது. இதற்கு மாநிலத் தலைவா் ரெக்ஸ் ஆனந்தகுமாா் தலைமை வகித்தாா்.
மாநில பொருளாளா் கி. கண்ணன் முன்னிலை வகித்தாா். மாநில துணைத் தலைவா் ஞானசேகரன், துணைச் செயலா் வேல்முருகன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். பொதுச் செயலா் ராபா்ட் சிறப்புரையாற்றினாா்.
இதில், மாவட்ட கிளை, வட்டார கிளை நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டு உறுதி மொழி எடுத்துக் கொண்டனா். மாநாட்டில், விருதுநகா், மதுரை, புதுக்கோட்டை,சிவகங்கை, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய தென்மாவட்டங்களிலிருந்து திரளானோா் கலந்து கொண்டனா்.