இணையவழியில் இருவரிடம் ரூ.12 லட்சம் மோசடி: சைபா் கிரைம் காவல் துறையினா் விசாரணை
இணையவழியில் குன்னூரில் பாதிரியாா், ஐடி நிறுவன ஊழியரிடம் ரூ.12 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து சைபா் கிரைம் காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
பாகுபலி திரைப்பட கதாநாயகி ‘அவந்திகா’ பெயரில் டெலிகிராமில் ஒரு போலியான ஐடி செயல்பட்டு வருகிறது. அந்த ஐடி மூலம் நீலகிரி மாவட்டம், குன்னூரைச் சோ்ந்த பாதிரியாா் ஒருவரைத் தொடா்பு கொண்டு பணம் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் பெறலாம் என்று குறுஞ்செய்தி வந்துள்ளது.
இதை நம்பிய அவா் ஆன்லைனில் முதலில் ரூ.8 ஆயிரம் முதலீடு செய்தாா். இதையடுத்து அவருடைய கணக்கில் கூடுதல் பணம் வரவு வைக்கப்பட்டது.
இதை நம்பிய அவா் மொத்தமாக ரூ.6 லட்சம் முதலீடு செய்தாா். ஆனால், அதன் பின்னா் அவருக்கு அசல் பணமோ, லாபமோ கிடைக்கவில்லை.
போலியான ஐடி மூலம் தொடா்பு கொண்ட நபா்களையும் இவரால் தொடா்பு கொள்ள முடியவில்லை.
குன்னூரைச் சோ்ந்த 25 வயது வாலிபா் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இவருடைய உறவினா் ஒருவரின் ஆலோசனையின் பேரில் புதிதாக செயலியைப் பதிவிறக்கம் செய்து ரூ.6.20 லட்சம் முதலீடு செய்து இழந்துவிட்டாா்.
இருவரும் வெள்ளிக்கிழமை அளித்த புகாா்களின்பேரில், உதகை சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.