'இது எவ்வளவு பெரிய அவமானம்' - பெண் ஏடிஜிபி விவகாரத்தில் வானதி சீனிவாசன் கேள்வி
பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ-வுமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “திருப்பரங்குன்றத்தில் திட்டமிட்டு மத மோதலை உருவாக்க முயற்சிக்கிறது. திமுக சிறுபான்மை மக்களை தாஜா செய்கிற வகையில் அங்கு மிகப்பெரிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்து முன்னணியின் போராட்டத்துக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது ஜனநாயக விரோத செயல். அங்கு அசைவ உணவுகளை சாப்பிடுவதற்கும், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சமணர் குகைகளில் பச்சை நிற பெயின்ட் அடிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சிறுபான்மை மக்களின் வாக்கு வங்கிக்காக திமுக இந்து மத உணர்வுகளை தொடர்ந்து அவமதிக்கிறது. இந்து மக்களின் உணர்வுகளோடு விளையாடுவதற்கு வருகிற தேர்தலில் தமிழக மக்கள் திமுகவுக்கு தக்க பாடம் புகட்டுவார்கள். காவல்துறை பெண் ஏடிஜிபி, தன்னுடைய உயிருக்கே ஆபத்துள்ளது என்று கூறியுள்ளார். அந்த பெண் அதிகாரி துயரத்தை தாங்க முடியாமல், காவல்துறை உயர் அதிகாரியிடம் புகாரளித்து ஆறு மாதங்களாக விசாரிக்கப்படவில்லை என்று கூறியிருக்கிறார்.
இது எவ்வளவு பெரிய அவமானம். காவல்துறை முழுவதுமாக சீர்குலைந்து போயிருக்கிறது. காவல்துறையை கையில் வைத்துள்ள மாநிலத்தின் முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மத்திய பட்ஜெட்டை பொறுத்தவரை யாராலும் குறை சொல்ல முடியாத ஒரு பட்ஜெட்டாக உள்ளது. எதிர்க்கட்சிகள் குறை சொல்வதற்கு ஒரு பாயிண்ட் கூட கிடைக்கவில்லை. டெல்லி தேர்தல் களம் பாஜக-வுக்கு பிரகாசமாக உள்ளது. ஆம் ஆத்மி கட்சி மீது சாதாரண மக்களின் அதிருப்தி பல மடங்கு அதிகரித்துள்ளது.
அந்த மக்கள் பிரதமர் நரேந்திர மோடி அரசின் பலனை பெற வேண்டும் என்று நினைக்கிறார்கள். தமிழக பாஜக-வில் மொத்தமுள்ள 67 மாவட்டங்களில், 66 மாவட்ட தலைவர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மாநிலத் தலைவர் நியமனத்தை கட்சியின் மேலிடம் முடிவு செய்யும்.” என்றார்.