இந்தியத் தூதருடன் சீன வெளியுறவு அமைச்சக அதிகாரி சந்திப்பு
பெய்ஜிங்: இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையிலான ராணுவ ரீதியிலான மோதல் சூழலுக்கு இடையே சீனாவுக்கான இந்தியத் தூதர் பிரதீப் குமார் ராவத்தை ஆசிய விவகாரங்களுக்கான சீன வெளியுறவு அமைச்சக அதிகாரி லியூ ஜின்சாங் சந்தித்துப் பேசினார்.
இது தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
சீனாவுக்கான இந்தியத் தூதர் பிரதீப் குமார் ராவத்தை ஆசிய விவகாரங்களுக்கான சீன வெளியுறவு அமைச்சக அதிகாரி லியூ ஜின்சாங் சந்தித்துப் பேசினார். சீன-இந்திய உறவுகள் தொடர்பாக இருதரப்பும் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டன.
இந்தியாவும் பாகிஸ்தானும் சண்டை நிறுத்தத்துக்கான உடன்பாடு கண்டுள்ளதைக் காணவே சர்வதேச சமூகம் விரும்பியது. இந்த நடவடிக்கையை சீனா ஆதரிக்கவும் வரவேற்கவும் செய்கிறது.
சண்டை நிறுத்தத்துக்கான சூழலை வலுப்படுத்த இந்தியாவும் பாகிஸ்தானும் பாடுபடும் என்றும் மேலும் பூசல் ஏற்படுவதைத் தவிர்க்கும் என்றும் சீனா நம்புகிறது.
இரு நாடுகளும் கருத்து வேறுபாடுகளை பேச்சுவார்த்தை மூலம் கையாளும் என்றும் அரசியல் தீர்வுக்கான பாதையில் இரு நாடுகளும் பயணிக்கும் என்றும் நம்புகிறோம்.
இந்தியா மற்றும் பாகிஸ்தானுடன் தகவல் தொடர்பைக் கொண்டிருக்கவும் இரு நாடுகளிடையே சண்டை நிறுத்தத்தை அமல்படுத்தவும் முக்கியப் பங்காற்ற சீனா தயாராக உள்ளது என்று செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஜம்மு}காஷ்மீர் மாநிலம், பஹல்காமில் பயங்கரவாதிகள் கடந்த மாதம் 22-ஆம் தேதி நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக இந்திய ராணுவம் மே 7-ஆம் தேதி நடத்திய "ஆப்பரேஷன் சிந்தூர்' நடவடிக்கையில் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்தது.
இந்நிலையில், சண்டை நிறுத்தத்தை அமலுக்கு கொண்டுவர இந்தியாவும் பாகிஸ்தானும் சனிக்கிழமை உடன்பாடு கண்டன. இரு தரப்புக்கு இடையே உடன்பாடு எட்டப்பட்டதை சீனா திங்கள்கிழமை வரவேற்றது.