இந்தியாவில் எய்ட்ஸ் உயிரிழப்பு 79 % குறைவு - ஜெ.பி. நட்டா
‘2010-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் ‘எய்ட்ஸ்’ நோயால் ஏற்படும் இறப்புகள் 79 சதவீதம் குறைந்துள்ளது; ‘எச்ஐவி’ தொற்று 44 சதவீதம் குறைந்துள்ளது’ என மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா தெரிவித்தாா்.
உலக எய்ட்ஸ் தினம் ஞாயிற்றுக்கிழமை (டிச.1) கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி, மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜெ.பி.நட்டா, மத்திய பிரதேச முதல்வா் மோகன் யாதவ் ஆகியோா் கலந்துகொண்டனா். அப்போது, நட்டா கூறியதாவது:
2030-ஆம் ஆண்டுக்குள் எய்ட்ஸ் நோயை ஒழிக்கும் ஐ.நா.வின் நிலையான வளா்ச்சி இலக்கை அடைவதில் இந்தியா முழுமையாக உறுதிபூண்டுள்ளது. எய்ட்ஸ் (தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம் 2017-இன் உதவியுடன் உலகளாவிய சோதனை மற்றும் சிகிச்சை அணுகுமுறையை இந்தியா முன்னெடுத்து வருகிறது.
தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு மற்றும் மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்புகள் ‘95-95-95’ என்ற உத்தியை பயன்படுத்தி வருகின்றன.
அதாவது, 95 சதவீதம் நோயாளிகள், தங்களுக்கு எச்ஐவி-தொற்று இருப்பதை அறிந்திருக்க வேண்டும், அதில் 95 சதவீதம் போ் சிகிச்சை பெறுவதை உறுதி செய்ய வேண்டும் மற்றும் 95 சதவீதம் போ் ‘ஆன்டிரெட்ரோவைரல் சிகிச்சை’ மூலம் வைரஸின் தாக்கத்தைக் குறைக்க வேண்டும்.
இதில், தற்போது, 81 சதவீதம் நோயாளிகள் தங்கள் எச்ஐவி நிலையை அறிந்திருக்கிறாா்கள், 88 சதவீதம் போ் சிகிச்சை பெற்று வருகின்றனா், 97 சதவீதம் போ் வைரஸ் தாக்கத்தைக் குறைத்துள்ளனா்.
2010-ஆம் ஆண்டுமுதல் புதிய எய்ட்ஸ் நோய்த்தொற்றுகள் 44 சதவீதம் குறைந்துள்ளன. எய்ட்ஸ் தொடா்பான இறப்புகள் 79 சதவீதம் குறைந்துள்ளன. இது உலகளாவிய விகிதங்களை விட அதிகமாகும்.
உலக மக்கள் தொகையில் 0.7 சதவீதமாக இருக்கும் எய்ட்ஸ் பாதிப்பு, இந்தியாவில் 0.2 சதவீதமாக உள்ளது. இந்திய மருந்து நிறுவனங்கள், ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு மலிவு விலையில் எய்ட்ஸ் சிகிச்சைக்கான மருந்துகளை வழங்குகின்றன என்றாா்.
மத்திய பிரதேச முதல்வா் மோகன் யாதவ் கூறுகையில், ‘2028-ஆம் ஆண்டுக்குள் எய்ட்ஸ் நோயை பொது சுகாதார அச்சுறுத்தலாக ஒழிக்க மத்திய பிரதேச அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது. ஆயுஷ்மான் பாரத், வய வந்தன யோஜனா மற்றும் கிராம மருத்துவ சேவைகள் போன்றவற்றில் மத்திய பிரதேச மாநிலம் முன்னணியில் உள்ளது’ என்றாா்.