ஆண்களுக்கு ஏற்படும் தைராய்டு கட்டி புற்றுநோயாக இருக்கலாம்! - மருத்துவர் நேர்காணல...
இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கு எதிராக தஹாவூா் ராணா மேல்முறையீட்டு மனு: அமெரிக்க உச்சநீதிமன்றம் நிராகரிப்பு
நியூயாா்க்: மும்பை தாக்குதலில் கூட்டுச் சதியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்படும் தஹாவூா் ராணாவை (64) இந்தியாவுக்கு நாடு கடத்த தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை அமெரிக்க உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.
கடந்த 2008-ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் 170-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத இயக்கம் நடத்திய இந்தத் தாக்குதலில், பாகிஸ்தானை பூா்விகமாக கொண்ட தஹாவூா் ராணா கூட்டுச் சதியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
லஷ்கா்-ஏ-தொய்பா இயக்கத்துக்கு அவா் உதவி வந்தது நிரூபிக்கப்பட்டதைத் தொடா்ந்து, அவரை குற்றவாளி என்று அமெரிக்க நீதிமன்றம் தீா்ப்பளித்தது. தற்போது அந்நாட்டின் லாஸ் ஏஞ்சலீஸ் சிறையில் அவா் அடைக்கப்பட்டுள்ளாா்.
அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது. ஆனால் தான் இந்திய சிறையில் சித்திரவதை செய்யப்படலாம் என்று தெரிவித்து, நாடு கடத்துவதற்கு எதிராக ராணா தாக்கல் செய்த மனுவை கடந்த ஜன.21-ஆம் தேதி அமெரிக்க உச்சநீதிமன்றம் நிராகரித்தது.
கடந்த பிப்ரவரி மாதம் பிரதமா் மோடி அமெரிக்கா சென்றபோது, இந்தியாவிடம் தஹாவூா் ராணா ஒப்படைக்கப்படுவாா் என்று அமெரிக்க அதிபா் டிரம்ப் அறிவித்தாா்.
இதைத்தொடா்ந்து நாடு கடத்தப்படுவதற்கு எதிராக அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் தஹாவூா் ராணா மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தாா். அந்த மனுவை அந்த நீதிமன்றம் நிராகரித்துவிட்டதாக அமெரிக்க உச்சநீதிமன்ற வலைதளத்தில் திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து தேசிய புலனாய்வு முகமையிடம் (என்ஐஏ) தஹாவூா் ராணா விரைவில் ஒப்படைக்கப்படுவாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.