கொச்சி: பஹல்காம் தாக்குதலில் பலியானவரின் குடும்பத்தினரைச் சந்தித்த அமித் ஷா
இந்தியாவுடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்த தயார்: பாகிஸ்தான் அறிவிப்பு!
காஷ்மீர் உள்ளிட்ட நிலுவையில் உள்ள அனைத்து பிரச்னைகள் குறித்தும் இந்தியாவுடனான விரிவான பேச்சுவார்த்தைக்குத் தயார் என பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பது மற்றும் பயங்கரவாதம் ஆகிய விவகாரங்கள் குறித்த பேச்சுவார்த்தைகள் மட்டுமே பாகிஸ்தானுடன் நடத்தப்படும் என இந்திய அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது.
இந்நிலையில், இஸ்லாமாபாத்தில் உள்ள பாகிஸ்தான் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுடன் பேசிய அந்நாட்டின் துணைப் பிரதமரும், வெளியுறவுத் துறை அமைச்சருமான இஷாக் தார், இந்தியாவுடன் நடுநிலையான இடத்தில் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் தயார் எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் பேசியதாவது:
“காஷ்மீர் மட்டுமில்லாமல் நிலுவையிலுள்ள அனைத்து பிரச்னைகள் குறித்தும் இந்தியாவுடன் எப்போது வேண்டுமானாலும் பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயார். நடுநிலையான இடத்தில் இந்தப் பேச்சுவார்த்தை நடத்த சொன்னார்கள். அப்படியானால், நாங்கள் அவர்களைச் சந்திக்கத் தயாராக இருக்கின்றோம்“ எனக் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, இந்தியாவுடனான பேச்சுவார்த்தைகள் ஒருசார்புடையாதாக மட்டுமே இருக்காது எனவும், இருநாடுகளுக்கு இடையில் போர்நிறுத்தம் கொண்டு வருவதற்கு அமெரிக்காவில் இருந்து தனக்கு அழைப்பு வந்ததாகவும், பாகிஸ்தான் துணைப் பிரதமர் இஷாக் தார் தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதியன்று, பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து, ஆபரேஷன் சிந்தூர் எனும் ராணுவ நடவடிக்கையின் மூலம், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் அமைந்திருந்த பயங்கரவாத முகாம்களின் மீது இந்தியா தாக்குதல் நடத்தி தகர்த்தது.
அதையடுத்து, இருநாடுகளுக்கும் இடையில் தொடங்கிய போரானது, மே 10 ஆம் தேதி நிறுத்தப்பட்டது. இதில், இந்தியா - பாகிஸ்தான் இடையில் போர்நிறுத்தம் ஏற்பட தானே காரணம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து கூறி வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ஈரான்: ஆப்கன், பாக். எல்லையில் 5 காவல் அதிகாரிகள் சுட்டுக்கொலை!