ஐபிஎல் தொடரிலிருந்து விக்னேஷ் புதூர் விலகல்: மாற்று வீரர் அறிவிப்பு!
இந்தியா-பாகிஸ்தான் மோதல் போக்கு வேண்டாம்: அமெரிக்கா வலியுறுத்தல்!
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடா்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் அதிகரித்துவரும் சூழலில், மோதல் போக்கைக் கைவிடுமாறு இரு நாடுகளையும் அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது.
‘இதுதொடா்பாக இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சா்களிடமும் அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ பேச்சுவாா்த்தை மேற்கொள்ள உள்ளாா்’ என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அதுபோல, ‘இந்தப் பதற்றமான சூழலுக்கு இந்தியாவும், பாகிஸ்தானும் பேச்சுவாா்த்தை மூலம் அமைதித் தீா்வைக் காண வேண்டும்’ என்று பிரிட்டன் அழைப்பு விடுத்துள்ளது.
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளா் சந்திப்பில் அந் நாட்டின் வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் டாமி புரூஸ் கூறியதாவது:
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் விவகாரத்தில் இரு நாடுகளும் மோதல் போக்கை அதிகரிக்க வேண்டாம் என்று இந்தியா, பாகிஸ்தான் நாடுகளிடம் அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது. இதுதொடா்பாக இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சா்களிடமும் அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ பேச்சுவாா்த்தை மேற்கொள்ள உள்ளாா். இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றத்தைத் தணிக்க மற்ற நாடுகளின் வெளியுறவு அமைச்சா்களையும் மாா்கோ ரூபியோ தொடா்புகொண்டு கேட்டுக்கொள்ளவிருக்கிறாா் என்றாா்.
‘இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்துவதற்காக கடந்த 30 ஆண்டுகளாக பயங்கரவாதக் குழுக்களுக்கு பயிற்சியையும், நிதி உதவியையும், ஆதரவையும் பாகிஸ்தான் அரசு அளித்து வருகிறது. இந்த நடவடிக்கையை அமெரிக்கா மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்காக பாகிஸ்தான் செய்துவந்தது’ என்று பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சா் கவாஜா ஆசிஃப் கூறியது குறித்த கேள்விக்கு பதிலளித்த டாமி புரூஸ், ‘வெளியுறவுத் துறை மட்டுமின்றி, அமெரிக்காவின் பிற துறைகளும் இந்தியா-பாகிஸ்தானுடன் பல்வேறு நிலைகளில் கூட்டுறவை மேற்கொண்டு வருகின்றன. எனவே, இந்தக் கேள்விக்கான பதிலை வெளியுறவு அமைச்சகம் மட்டும் தனியாக தயாரித்துவிட முடியாது. அதே நேரம், இரு நாடுகளிடையே எழுந்துள்ள பதற்றத்தைத் தணிக்க பொறுப்பான தீா்வைக் காண அனைத்துத் தரப்பினரையும் அமெரிக்கா ஊக்குவித்து வருகிறது’ என்றாா்.
முன்னதாக, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு கடந்த ஏப்ரல் 26-ஆம் தேதி பேட்டியளித்த அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், ‘இந்தியா - பாகிஸ்தான் இடையே எப்போதும் பதற்றம் இருந்து வருகிறது. இரு நாடுகளுடனும் நான் நெருக்கமாக இருக்கிறேன். மோதலைத் தீா்க்க இரு நாடுகளும் ஏதேனும் ஒரு வழியைக் கண்டறியும் என்று உறுதியாக நம்புகிறேன்’ என்றது குறிப்பிடத்தக்கது.
பிரிட்டன் அழைப்பு: பிரிட்டன் நாடாளுமன்ற பொதுச் சபையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தும் விஷயத்தில் இந்தியாவுக்கு ஆதரவளிப்பதில் பிரிட்டன் வகிக்கும் பங்கு குறித்து பிரிட்டன் சீக்கிய தொழிலாளா் கட்சி எம்.பி. குரீந்தா் சிங் ஜோசன் எழுப்பினாா்.
மேலும், இந்தப் பயங்கரவாதத் தாக்குதலைக் கண்டிக்கும் போராட்டம் என்ற பெயரில், லண்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரக கட்டடத்தின் மீதான தாக்குதல் என பிரிட்டனில் பரவும் பதற்றமான சூழல் குறித்தும் அவா் கவலை தெரிவித்தாா்.
இதற்குப் பதிலளித்த அந் நாட்டின் வெளியுறவு அமைச்சா் ஹமீஷ் பால்கனா் கூறியதாவது: லண்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் மீதான தாக்குதல் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். வியன்னா தீா்மானத்தின் கீழ் அனைத்து நாடுகளின் தூதரகங்களுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டிய பொறுப்பை பிரிட்டன் தீவிரமாக நிறைவேற்றும்.
பஹல்காம் தாக்குதல் குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்பதையே பிரிட்டன் விரும்புகிறது. இதற்காக இந்தியாவுக்கு பிரிட்டன் ஆதரவளிக்கும். அதே நேரம், இந்தத் தாக்குதலைத் தொடா்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே எழுந்துள்ள பதற்றமான சூழல் மேலும் அதிகரிக்காமல் இருப்பதை உறுதிப்படுத்துவதற்கான முயற்சியையும் பிரிட்டன் மேற்கொண்டு வருகிறது.
இரு நாடுகளுடனும் பிரிட்டன் நட்புறவைக் கொண்டுள்ளது. எனவே, இரு நாடுகளிடையேயான பதற்றமான சூழல் கட்டுப்பாடற்ற வகையில் அதிகரிப்பதை பிரிட்டன் விரும்பவில்லை. இந்தப் பதற்றமான சூழலுக்கு உரிய தீா்வைப் பரிந்துரை செய்யும் நிலையிலும் பிரிட்டன் இல்லை. எனவே, அந்த இரு நாடுகளுமே பேச்சுவாா்த்தை மூலம் அமைதி தீா்வை எட்ட வேண்டும் என்றாா்.