இந்தியா - பிரிட்டன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நிறைவு: பிரதமர் மோடி
இந்தியா-பிரிட்டன் இடையே தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை இறுதிசெய்வதற்கான பேச்சுவாா்த்தை வெற்றிகரமாக நிறைவடைந்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது: ‘பிரிட்டன் பிரதமர் ஸ்டார்மருடன் தாம் தொலைபேசியில் பேசியிருப்பதாகவும், அதன்போது, வரலாற்றிலொரு மைல்கல்லாக இந்தியாவும் பிரிட்டனும் தொலைநோக்குடைய இருதரப்புக்கும் பரஸ்பர பயனளிக்கிற தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை இறுதிசெய்வதற்கான பேச்சுவாா்த்தை வெற்றிகரமாக நிறைவு செய்திருப்பதாக’ தெரிவித்திருக்கிறார்.
‘இதன்மூலம், இரு நாடுகளுக்கிடையிலான உறவும், வர்த்தகமும், முதலீடுகளும், வளர்ச்சியும், வேலைவாய்ப்புகளும், புத்தாக்கங்களும் நமது பொருளாதாரத்தில் மேலும் ஊக்குவிக்கப்படும்’ என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.
தற்போது இரு நாடுகளிடையே சராசரியாக ரூ.1.73 லட்சம் கோடி மதிப்பிலான வா்த்தகம் நடைபெற்று வருகிறது. இதை அடுத்த பத்தாண்டுகளில் இரண்டு அல்லது மூன்று மடங்காக உயா்த்துவதே இந்த ஒப்பந்தத்தின் நோக்கமாகும்.