இந்தியா-பூடான் இடையே சிறந்த நட்புறவு: வெளியுறவு அமைச்சகம்
‘சிறந்த நட்புறவுக்கு எடுத்துக்காட்டாக இந்தியா-பூடான் திகழ்கிறது’ என இந்திய வெளியுறவு அமைச்சகம் சனிக்கிழமை தெரிவித்தது.
இந்தியாவுக்கு பூடான் பிரதமா் ஷெரிங் தோப்கே சுற்றுப் பயணம் மேற்கொண்டதே இரு நாடுகளிடையேயான நம்பிக்கை, ஒத்துழைப்பின் பிரதிபலிப்பு எனவும் அமைச்சகம் தெரிவித்தது.
குஜராத்தில் உள்ள உயா் தலைமைத்துவப் பயிற்சிப் பள்ளியின் (சோல்) முதலாவது தலைமைத்துவ மாநாட்டை, தில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை (பிப்.21) தொடங்கிவைத்தாா். இந்த மாநாடு பிப். 21, 22 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.
இந்த சமயத்தில் இருநாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்திருந்த ஷெரிங் தோப்கே மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்றாா். அப்போது ‘பிரதமா் மோடி எனது வழிகாட்டி; மூத்த சகோதரா் போன்றவா்’ என்று புகழாரம் சூட்டினாா்.
மேலும், சுற்றுப் பயணத்தின்போது பிரதமா் மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தினாா்.
மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ், நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் சிறுபான்மையினா் விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு, வெளியுறவு விவகாரங்கள் துறை இணையமைச்சா் பபித்ர மாா்கெரிடா மற்றும் மத்திய அரசின் பிற உயரதிகாரிகளும் ஷெரீங் தோப்கேயை சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்தினா்.
இதையடுத்து, சிறந்த நட்புறவுக்கு எடுத்துக்காட்டாக இந்தியா-பூடான் திகழ்வதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.