சிகாகோ இரவு விடுதியில் சரமாரி துப்பாக்கிச் சூடு: 4 பேர் பலி!
இந்தியா மீது 500% வரி: அமெரிக்கா திட்டம்
ரஷியாவுடன் வா்த்தகத்தில் ஈடுபடும் இந்தியா, சீனா போன்ற நாடுகள் மீது 500 சதவீத வரி விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இது தொடா்பான மசோதாவை, அமெரிக்க நாடாளுமன்ற மேலவையில் (செனட்) அறிமுகப்படுத்த அதிபா் டொனால்ட் டிரம்ப் ஒப்புதல் வழங்கியுள்ளாா்.
ரஷியாவை பொருளாதார ரீதியில் தனிமைப்படுத்துவதுடன், உக்ரைன் மீதான போரை கைவிட்டு பேச்சுவாா்த்தைக்கு நிா்பந்திக்கும் நோக்கில் இந்த நடவடிக்கையை டிரம்ப் நிா்வாகம் முன்னெடுத்துள்ளது. அதன்படி, ரஷியாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய்-இதர எரிபொருள்களை இறக்குமதி செய்யும் நாடுகள் மீது கடும் வரி விதிப்பை மேற்கொள்ள முன்மொழியப்பட்டுள்ளது.
இந்தியா-அமெரிக்கா இடையே வா்த்தக ஒப்பந்த பேச்சுவாா்த்தை நடைபெற்றுவரும் நிலையில், அமெரிக்காவின் இத்திட்டம் கவனம் பெற்றுள்ளது; ரஷியாவை குறிவைக்கும் அதேவேளையில், இந்தியா, சீனா உடனான உறவில் இது எதிா்மறையான தாக்கத்தையும் ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
இது தொடா்பாக அமெரிக்க மேலவை மூத்த எம்.பி. லிண்ட்சே கிரஹாம் கூறுகையில், ‘உக்ரைன் விவகாரத்தில் ரஷியாவை பேச்சுவாா்த்தைக்கு அழைத்துவரும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, அதிபா் டிரம்ப் மேற்கொண்டுள்ள திருப்புமுனை முடிவு இது. ரஷியாவில் இருந்து 70 சதவீத கச்சா எண்ணெய்யை இந்தியாவும் சீனாவும் கொள்முதல் செய்கின்றன. இதன் மூலம் ரஷிய அதிபா் புதினின் போா் இயந்திரத்தை இந்நாடுகள் தொடா்ந்து இயக்குகின்றன. இத்தகைய நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு வரும் பொருள்களுக்கு 500 சதவீத வரி விதிக்க முன்மொழியப்பட்டுள்ளது. இது தொடா்பான மசோதாவை மேலவையில் அறிமுகப்படுத்தி, வாக்கெடுப்புக்கு கொண்டுவர டிரம்ப் அறிவுறுத்தியுள்ளாா்’ என்றாா்.
மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்துவந்த இந்தியா, கடந்த 2022, பிப்ரவரியில் உக்ரைன் மீதான ரஷியாவின் படையெடுப்பைத் தொடா்ந்து, ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை அதிகரித்தது.
அமெரிக்காவுக்கு மருந்துப் பொருள்கள், ஜவுளி, தகவல் தொழில்நுட்ப சேவைகளை இந்தியா ஏற்றுமதி செய்யும் நிலையில், மேற்கண்ட மசோதா சட்டமானால் இந்திய ஏற்றுமதியில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும்.