இந்திய அணிக்கு தலைவலி: காரணம் டிராவிஸ் ஹெட்-‘ஏக்’ -தினேஷ் கார்த்திக் சொல்வதென்ன?
சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் டிராவிஸ் ஹெட் இந்திய அணிக்கு பெருந்தலைவலியாக இருப்பார் என்று முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் பேசியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை (மாா்ச் 4) பிற்பகல் களம் காணுகின்றன.
இந்திய அணிக்கு எதிரான இன்றைய அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் டிராவிஸ் ஹெட் விக்கெட்டை இந்திய பந்துவீச்சாளர்கள் கைப்பற்றுவதே இந்திய அணியின் கோப்பை கனவுக்கான முக்கிய துருப்புச்சீடாக அமையுமென்று பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், டிராவிஸ் ஹெட் குறித்து தினேஷ் கார்த்திக் அளித்துள்ளதொரு பேட்டியில் பேசியிருப்பதாவது: “ரவி சாஸ்திரி கூறியிருப்பது போல, இத்தருணத்தில் ஒட்டுமொத்த ஆஸ்திரேலிய அணியைவிடவும் ஒரேயொரு வீரர்தான் இந்திய அணி வீரர்களின் மன அழுத்தத்துக்கான முக்கிய காரணமாக இருப்பார். அவர் டிராவிஸ் ‘ஹெட்-ஏக்’.
அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் இந்திய அணிக்கு சிம்ம்சொப்பனமாக அவர் திகழ்கிறார். இந்த நிலையில், அவரது விக்கெட்டை வீழ்த்த இந்திய வீரர்கள் முனைப்பு காட்டுவார்கள்.
ஒருவேளை அவரது விக்கெட்டை மிக விரைவிலேயே கைப்பற்றிவிட்டால், இந்திய வீரர்கள் ஆட்டத்தில் பிற விஷயங்களையெல்லாம் பொருட்படுத்தாமல் நிம்மதி பெருமூச்சு விடுவதைப் பார்க்கலாம்” என்றார்.