இந்திய அணிக்கு பெரும் தலைவலியாக டிராவிஸ் ஹெட்: ரவி சாஸ்திரி
இந்திய அணிக்கு டிராவிஸ் ஹெட் பெரும் தலைவலியாக இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறார். பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் டிராவிஸ் ஹெட் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பின், அவர் அடுத்த மூன்று இன்னிங்ஸ்களில் 89, 140, 152 ரன்கள் முறையே எடுத்தார். அடிலெய்டு டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்த அவர் மிக முக்கிய காரணமாக இருந்தார்.
இதையும் படிக்க: பாக்ஸிங் டே டெஸ்ட்: தீவிர வலைப்பயிற்சியில் இந்திய பந்துவீச்சாளர்கள் (விடியோ)!
தலைவலிக்கு மருந்து தேடும் இந்தியா
5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன. இந்த நிலையில், இந்திய அணிக்கு டிராவிஸ் ஹெட் பெரும் தலைவலியாக இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: டிராவிஸ் ஹெட் மிகவும் சாதுரியமாக விளையாடுகிறார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இருந்த டிராவிஸ் ஹெட்டிலிருந்து மாற்றமடைந்து, அவரிடம் அதிக முன்னேற்றங்களைக் காண முடிகிறது. அதிலும் குறிப்பாக, அவர் ஷாட் பந்துகளை விளையாடும் விதம் மிகவும் சிறப்பாக உள்ளது. அவர் பந்துகளை லீவ் செய்வதற்கு தயாராகிவிட்டார். பந்துகளை லீவ் செய்வதை அவர் நன்றாக கற்றுக் கொண்டுள்ளார்.
இதையும் படிக்க: இந்திய அணியின் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக திட்டங்கள் உள்ளன: இளம் ஆஸி. வீரர்
டிராவிஸ் ஹெட்டினை தடுத்து நிறுத்துவது மிகவும் கடினம். அவர் லைன் அண்ட் லென்த்தை நன்றாக கவனித்து சிறப்பாக விளையாடுகிறார். அது அவரது மிகப் பெரிய பலமாக உள்ளது. அவரது கிரிக்கெட் பயணத்தில் மிகவும் சிறப்பான ஃபார்மில் இருக்கிறார். அவரைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினம். டிராவிஸ் ஹெட் என்ற தலைவலிக்கு இந்திய அணி மருந்து தேடி வருகிறது. ஹெட் என்ற அவரது துணைப் பெயர் இந்திய அணிக்கு தலைவலியாக (ஹெட்ஏக்) உள்ளது. கை வலி, கால் வலிக்கு மருந்து போட்டு குணப்படுத்துவது போல், இந்திய அணி தற்போது டிராவிஸ் ஹெட் என்ற தலைவலிக்கான மருந்து தேடும் முயற்சியில் இறங்கியுள்ளது என்றார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி வருகிற டிசம்பர் 26 ஆம் தேதி மெல்போர்னில் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.