சிங்கப்பூர் தேர்தல்: தொடர்ச்சியாக 14-ஆவது முறையாக ஆளுங்கட்சி வெற்றி! பிரதமர் மோட...
``இந்திய வரலாற்றில் முதல் ஓ.பி.சி பிரதமர் நரேந்திர மோடிதான்..'' - இராம ஸ்ரீநிவாசன்
"முறையான சமூக நீதியை கொண்டு வரவும், அனைவருக்கும் எல்லாம் முறையாக சென்றடையவும் தான் சாதிவாரி கணக்கெடுப்பு மத்திய அரசால் எடுக்கப்பட உள்ளது." என்று பாஜக பொதுச்செயலாளர் இராம ஸ்ரீநிவாசன் தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய இராம ஸ்ரீநிவாசன், "சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்துவந்த நிலையில், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

மக்கள் தொகை கணக்கெடுப்போடு ஜாதி வாரி கணக்கு எடுக்கப்பட இருக்கிறது. இந்த பணி அடுத்த ஆண்டு தொடஙகும். இந்திய வரலாற்றிலேயே முதல் ஓ.பி.சி பிரதமர் நரேந்திர மோடி தான்.
இந்திய மக்களின் நலனுக்காக ஓய்வின்றி நம் பிரதமர் பணியாற்றி வருகிறார். இன்றைய காலச் சூழலில் சாதிவாரி கணக்கெடுப்பு தேவையான ஒன்று என்று அறிந்து மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.
டி.என்.டி பிரிவினரை குற்றப் பரம்பரை என நீதிக்கட்சி ஆட்சியில்தான் அமல்படுத்தப்பட்டது. ஆனால், அந்த நீதிக் கட்சியிலிருந்து தோன்றிய திமுக இன்று சமூகநீதி பற்றி பேசுகிறது. இந்தியாவில் மத்திய அரசுக் கூட்டணியில் அதிக ஆண்டுகள் இருந்த கட்சி திமுகதான். காங்கிரசுடன் கைகோர்த்துள்ள திமுக, மன்மோகன் சிங் ஆட்சியின்போது சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த ஏன் குரல் கொடுக்கவில்லை?
இது பீகார் தேர்தலுக்காக எடுத்த முடிவு அல்ல. அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்தது போல அடுத்த ஆண்டு கணக்கெடுப்பு பணிகள் தொடங்கி ஒன்றை ஆண்டில் முடியும்.
காங்கிரஸ் ஆளும் தெலுங்கானாவில் சர்வே முறையில் கண்மூடித்தனமாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இப்போது எடுக்க உள்ள கணக்கெடுப்பு அதுபோல இருக்காது. ஒவ்வொருவரையும் தனித்தனியாக அடையாளப்படுத்தி துல்லியமாக எடுக்கப்பட உள்ளது.

சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க கூடாது என்பதுதான் காங்கிரசின் நிலைப்பாடு, இன்று திடீரென சமூக நீதி மீது அக்கறை வந்துள்ளது ஆச்சரியம் அளிக்கிறது. முறையான சமூக நீதியை கொண்டு வரவும், அனைவருக்கும் எல்லாம் முறையாக சென்றடையும்தான் ஜாதி வாரி கணக்கெடுப்பு மத்திய அரசால் எடுக்கப்பட உள்ளது.
சாதிவாரி கணக்கெடுப்தில் திருமாவளவன் நிலைப்பாடு என்னவென்று கூற வேண்டும், கண் மூடித்தனமாக அவர் பேசக்கூடாது. பட்டியல் இன மக்களுக்காக குரல் கொடுப்பவர் தனது நிலைப்பாட்டை உறுதிப்படுத்த வேண்டும்.
விஜய்யுடன் என்.டி.ஏ கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துகிறதா என்று எனக்கு தெரியாது, ஆனால் திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதில் விஜய் உறுதியாக இருந்தால் பாஜக கூட்டணிக்கு வரலாம், நாங்கள் வரவேற்கிறோம். எல்லா கட்சியிலும் இளைஞர் அணி இருக்கும், ஆனால், விஜய் கட்சியில் குழந்தைகள் அணி, பாப்பா அணிகள் உள்ளது.
சேர்கின்ற கூட்டம் வேறு, அது வாக்காக மாறுவது வேறு, கமலஹாசனுக்கு கூட்டம் கூடவில்லையா, 1984 ல் எம்ஜிஆரை விட கலைஞருக்குதான் அதிக கூட்டம் கூடியது, ஆனால் அந்த தேர்தலில் கலைஞர் தோற்றுப் போனார். அரசியல் அனுபவம் இல்லாததால் விஜய்க்கு அது புரியாது, தேர்தலுக்கு பிறகு புரிந்து கொள்வார். திமுகவை வீழ்த்த வேண்டும் என ஒத்த சிந்தனையில் உள்ள அனைவரும் தாராளமாக என்.டி.ஏ கூட்டணிக்கு வரலாம்." என்றார்.