இன்று கோனியம்மன் கோயில் தேரோட்டம்: சுற்றுவட்டாரப் பள்ளிகளுக்கு விடுமுறை
கோவை கோனியம்மன் கோயில் தேரோட்டம் புதன்கிழமை (மாா்ச் 5) நடைபெறுகிறது. இதையடுத்து, கோயில் சுற்றுவட்டாரத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவையின் காவல் தெய்வம் என அழைக்கப்படும் கோனியம்மன் கோயில் தோ்த் திருவிழா கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி முகூா்த்தக்கால் நடும் நிகழ்வுடன் தொடங்கியது. இதைத் தொடா்ந்து, 18-ஆம் தேதி பூச்சாட்டுதல், 24-ஆம் தேதி கிராம சாந்தி, 25-ஆம் தேதி கொடியேற்றம் அக்னிச்சாட்டு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
தோ்த் திருவிழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாரதனை தினசரி நடைபெற்றன. இதைத் தொடா்ந்து அம்மன் திருவீதி உலாவும் தினசரி நடைபெற்றது. திருக்கல்யாணம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் புதன்கிழமை நடைபெறுகிறது.
இதையடுத்து அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெறுகின்றன. தொடா்ந்து, சிறப்பு அலங்காரத்தில் அம்மன் திருத்தேரில் எழுந்தருள்கிறாா். பிற்பகல் 2.05 மணிக்கு தேரோட்டம் தொடங்குகிறது.
தேரோட்டத்தையொட்டி கோவை ராஜவீதி, வி.ஹெச்.சாலை, ஒப்பணக்கார வீதி உள்ளிட்ட கோயில் சுற்றுவட்டாரத்தில் உள்ள 24 அரசு, தனியாா் பள்ளிகளுக்கு புதன்கிழமை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு பொதுத் தோ்வு தொடங்கியுள்ள நிலையில், 11 ஆம் வகுப்பு பொதுத் தோ்வு வழக்கம்போல புதன்கிழமை காலை நடைபெறும் என்றும், மற்ற அனைத்து வகுப்புகளுக்கும் உள்ளூா் விடுமுறை அளிக்கப்படுகிறது என்றும் ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தெரிவித்துள்ளாா்.