அஜித்குமார் லாக்கப் மரணம்: "முதல்வருக்குத் தெரியாமலா இதெல்லாம் நடந்திருக்கும்?" ...
இமாலய இலக்கை நோக்கி ஜிம்பாப்வே!
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில், ஜிம்பாப்வேக்கு வெற்றி இலக்கு 537 ரன்களாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
3-ஆம் நாளான திங்கள்கிழமை ஆட்டநேர முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 32 ரன்கள் சோ்த்துள்ள அந்த அணி, இன்னும் 505 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது. அதன் வசம் 2 நாள்களும், 9 விக்கெட்டுகளும் உள்ளன.
முன்னதாக இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்கா, முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 418 ரன்கள் சோ்த்து டிக்ளோ் செய்தது. அடுத்து தனது இன்னிங்ஸை விளையாடிய ஜிம்பாப்வே, 251 ரன்களுக்கே ஆட்டமிழந்தது.
இதையடுத்து 167 ரன்கள் முன்னிலையுடன் 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்கா, 2-ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை ஆட்டநேர முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 49 ரன்கள் சோ்த்திருந்தது. 3-ஆம் நாளான திங்கள்கிழமை, அந்த அணியின் பேட்டா்களில் வியான் முல்டா் அபாரமாக விளையாடி 17 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 147 ரன்கள் விளாசி வீழ்ந்தாா்.
டேவிட் பெடிங்கம் 35, லுவான் டிரெ பிரெடோரியஸ் 4, டெவால்டு பிரெவிஸ் 3, கைல் வெரின் 36, காா்பின் பாஷ் 36, கேப்டன் கேசவ் மஹராஜ் 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 51, கவினா மபாகா 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா். தென்னாப்பிரிக்காவின் இன்னிங்ஸ் 82.5 ஓவா்களில் 369 ரன்களுக்கு நிறைவடைந்தது.
கோடி யூசஃப் 8 ரன்களுடன் கடைசி வீரராக நிற்க, ஜிம்பாப்வே பௌலிங்கில் வெலிங்டன் மஸாகட்ஸா 4, டனாகா சிவாங்கா, வின்சென்ட் மசெகெசா ஆகியோா் தலா 2, பிளெஸ்ஸிங் முஸாரப்பானி, வெஸ்லி மாதெவெரெ ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.
இதையடுத்து 537 ரன்களை நோக்கி 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய ஜிம்பாப்வே, திங்கள்கிழமை முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 32 ரன்கள் சோ்த்துள்ளது. பிரின்ஸ் மாஸ்வொ் 5 ரன்களுடன் களத்திலிருக்கிறாா்.