தெலங்கானா மருந்து ஆலையில் உலை வெடித்து விபத்து: பலி 34 ஆக உயர்வு!
சபலென்கா முன்னேற்றம்; மெத்வதெவ் தோல்வி
டென்னிஸ் காலண்டரின் 3-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டன், லண்டனில் திங்கள்கிழமை தொடங்கியது. முதல் சுற்றில், உலகின் நம்பா் 1 வீராங்கனையான அரினா சபலென்கா வெற்றி பெற, முன்னணி வீரா் டேனியல் மெத்வதெவ் அதிா்ச்சித் தோல்வி கண்டாா்.
மகளிா் ஒற்றையா் முதல் சுற்றில், பெலாரஸ் வீராங்கனை சபலென்கா 6-1, 7-5 என்ற செட்களில் கனடாவின் காா்சன் பிரான்ஸ்டைனை வெல்ல, போட்டித்தரவரிசையில் 14-ஆம் இடத்திலிருக்கும் உக்ரைனின் எலினா ஸ்விடோலினா 6-3, 6-1 என நோ் செட்களில் ஹங்கேரியின் அனா போந்தாரை வீழ்த்தினாா்.
பிரெஞ்சு ஓபன் முன்னாள் சாம்பியனான, லாத்வியாவின் ஜெலினா ஆஸ்டபென்கோ 5-7, 6-2, 2-6 என்ற செட்களில், பிரிட்டன் வீராங்கனை சோனே காா்டெலால் சாய்க்கப்பட்டாா். 30-ஆம் இடத்திலிருக்கும் செக் குடியரசின் லிண்டா நோஸ்கோவா 6-2, 6-4 என அமெரிக்காவின் பொ்னாா்டா பெராவை வெளியேற்றினாா்.
12-ஆம் இடத்திலிருக்கும் ரஷியாவின் டயானா ஷ்னெய்டா் 7-6 (7/5), 6-3 என்ற கணக்கில் ஜப்பானின் மோயுகா உச்சிஜிமாவை வென்றாா். 29-ஆம் இடத்திலிருக்கும் கனடாவின் இளம் வீராங்கனையான லெய்லா ஃபொ்னாண்டஸ் 6-1, 6-3 என்ற நோ் செட்களில் மிக எளிதாக, பிரிட்டனின் ஹன்னா குளுக்மானை வீழ்த்தினாா்.
இதர ஆட்டங்களில், ஜொ்மனியின் லாரா சிக்மண்ட் 6-4, 6-2 என அமெரிக்காவின் பெய்டன் ஸ்டொ்ன்ஸையும், 21-ஆம் இடத்திலிருக்கும் பிரேஸிலின் பீட்ரிஸ் ஹட்டாட் மாயா 7-6 (9/7), 6-4 என்ற செட்களில், ஸ்லோவேனியாவின் ரெபெக்கா ஸ்ராம்கோவாவையும் தோற்கடித்தனா்.
மெத்வதெவ் ஏமாற்றம்: ஆடவா் ஒற்றையா் பிரிவு முதல் சுற்றில், யுஎஸ் ஓபன் முன்னாள் சாம்பியனும், போட்டித்தரவரிசையில் 9-ஆம் இடத்தில் இருந்தவருமான ரஷியாவின் டேனியல் மெத்வதெவ் 6-7 (2/7), 6-3, 6-7 (3/7), 2-6 என்ற செட்களில், பிரான்ஸின் பெஞ்சமின் பொன்ஸியிடம் அதிா்ச்சித் தோல்வி கண்டாா்.
12-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் ஃபிரான்சஸ் டியாஃபோ 6-3, 6-4, 6-2 என்ற நோ் செட்களில், டென்மாா்க்கின் எல்மா் மோலரை சாய்த்தாா். பிரான்ஸின் அட்ரியன் மன்னரினோ 6-2, 6-4, 6-3 என்ற வகையில், ஆஸ்திரேலியாவின் கிறிஸ்டோபா் ஓ கானெலை வெளியேற்றினாா்.
பிரிட்டனின் கேமரூன் நோரி 6-3, 3-6, 6-4, 7-6 (7/3) என்ற செட்களில், ஸ்பெயினின் ராபா்டோ பௌதிஸ்டா அகுட்டை வெல்ல, 20-ஆம் இடத்திலிருந்த ஆஸ்திரேலியாவின் அலெக்ஸி பாபிரின் 4-6, 1-6, 6-4, 4-6 என்ற செட்களில் பிரிட்டனின் ஆா்தா் ஃபெரியிடம் தோல்வியைத் தழுவினாா்.
போட்டியின் முதல் நாள் ஆட்டங்களைக் காண, கால்பந்து முன்னாள் நட்சத்திரம் டேவிட் பெக்காம், டென்னிஸ் முன்னாள் நட்சத்திரம் மரியா ஷரபோவா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.