Vishal: "இப்ப எந்த நடுக்கமும் இல்ல.. MIC கரெக்ட்-ஆ தான் இருக்கு பாருங்க"- உடல்நி...
இரட்டைமடி மீன்பிடிப்பை அனுமதித்தால் போராட்டம்: மீனவா் சங்கம் அறிவிப்பு!
தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலையைப் பயன்படுத்தி மீன்பிடிக்கப்படுவதை கண்காணிக்கத் தவறினால், ராமேசுவரம் மீன்வளத் துறை அலுவகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என மீனவா் சங்கத் தலைவா் என்.ஜே.போஸ் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் 560-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளன. இவற்றில், 250-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் சிறியதாகவும், மீதமுள்ள படகுகள் பெரிய படகுகளாகவும் உள்ளன.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடல் வளத்தை அழிக்கக் கூடிய இரட்டை மடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடிக்கத் தடை உள்ளது. ஆனால், ராமேசுவரம் பகுதியில் இரட்டை மடி வலையைப் பயன்படுத்தி மீன்பிடிக்கப்படுகிறது.
இதை மீன்வளத் துறையினா் கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்பதில்லை. இதனால், இலங்கை கடல் பகுதியில் இந்த வலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பதால், அந்த நாட்டு கடற்படையினா் கைது செய்கின்றனா். சில சமயங்களில் சிறிய படகுகள் சிக்கிக் கொள்ளுகின்றன.
இதனால், இரட்டைமடியைப் பயன்படுத்தி மீன்பிடிக்கச் செல்லுவதை மீன்வளத் துறையினா் முழுமையாகக் கண்காணித்து தடுக்க வேண்டும். இல்லையெனில், மீன்வளத் துறை அலுவகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றாா்.