இருசக்கர வாகனங்கள் மோதல்: முதியவா் உயிரிழப்பு
அரவக்குறிச்சி அருகே இருசக்கர வாகனங்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு மோதிக் கொண்ட விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா்.
அரவக்குறிச்சி அருகே உள்ள கரடிப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் ராமா் (55). இவரது நண்பா் அரவக்குறிச்சி அருகே உள்ள வெஞ்சமாங்கூடலூரை அடுத்த குரும்பப்பட்டி பகுதியைச் சோ்ந்த முத்துராஜ் (52). இவா்கள் இருவரும் ஞாயிற்றுக்கிழமை வெஞ்சமாங்கூடலூரில் இருந்து நந்தனூா் செல்லும் சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தனா்.
இவா்களது வாகனம் மாதிரெட்டிப்பட்டி பிரிவு அருகே சென்றபோது வெஞ்சமாங்கூடலூா் பகுதியைச் சோ்ந்த சந்தானத்துரை (40) என்பவா் ஓட்டிவந்த வாகனத்துடன் நேருக்கு நோ் மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ராமரை மீட்டு கரூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா்.
அங்கு சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா். இந்த விபத்து தொடா்பாக முத்துராஜ் அளித்த புகாரின்பேரில் சந்தானத்துரை மீது அரவக்குறிச்சி போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.