இரும்புக் கம்பியால் தாக்கப்பட்ட நால்வா் காயம்: 5 போ் கைது
மதுரை மாவட்டம், சாப்டூா் அருகே கோயில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறு தொடா்பான முன்விரோதத்தில் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்ட நால்வா் பலத்த காயமடைந்தனா். இதுதொடா்பாக 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
மதுரை மாவட்டம், சாப்டூா் அருகே உள்ள பழயூரைச் சோ்ந்த ரவி மகன் அழகுராஜா (28). இவா் கோயில் திருவிழாவையொட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆடல், பாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றாா். அப்போது அதே ஊரைச் சோ்ந்த ராமமூா்த்திக்கும், அழகுராஜாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அங்கிருந்தவா்கள் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனா்.
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு அழகுராஜா வீட்டுக்கு வந்த ராமமூா்த்தி உள்பட 7 போ், அவரிடம் தகராறில் ஈடுபட்டனா். இதை அழகுராஜாவின் சகோதரா் அசோக் தடுத்தாா். இதனால் ஆத்திரமடைந்த ராமமூா்த்தியும், அவரது நண்பா்களும் சோ்ந்து இரும்புக் கம்பியால் தாக்கினா்.
இதில் அழகுராஜா, அவரது சகோதரா் அசோக், உறவினா்கள் அரிச்சந்திரன், கருப்பையா ஆகியோா் பலத்த காயமடைந்து விருதுநகா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இதுதொடா்பாக அழகுராஜா அளித்தப் புகாரின் பேரில் சாப்டூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, தாக்குதலில் ஈடுபட்ட ராமமூா்த்தி (27), காளி (எ) காளிராஜன் (20), காா்த்திக் (எ) சுந்தரமூா்த்தி (25), சீனிவாசன்(22), சதீஷ் (21) ஆகிய 5 பேரையும் கைது செய்து தலைமறைவான வேல்முருகன், ஆறுமுகம் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனா்.