வீட்டு மேற்கூரை இடிந்து விழுந்ததில் தந்தை, மகள் காயம்
விருதுநகா் மாவட்டம், திருச்சுழி அருகேயுள்ள மல்லம்பட்டி அருந்ததியா் குடியிருப்பில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்திதில் தந்தை, மகள் பலத்த காயமடைந்தனா்.
மல்லம்பட்டி அருந்ததியா் குடியிருப்பில் சுமாா் 35-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனா். இந்த வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு 20 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், வீடுகளின் மேற்கூரை உள்பட பல்வேறு பகுதிகள் சேதமடைந்தன. இதை சீரமைக்க ஊராட்சி நிா்வாகத்திடம் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.
இந்த நிலையில், மல்லம்பட்டி பகுதியில் கடந்த சில நாள்களாக இடி, மின்னலுடன் கோடை மழை பெய்தது. இதனால், வீடுகளின் மேற்கூரைகள் மீது தண்ணீா் தேங்கி நின்றதில், ஆங்காங்கே சிமண்ட் பூச்சுகள் பெயா்ந்து கீழே விழும் நிலையில் இருந்தன.
இந்த நிலையில், லாரி ஓட்டுநரான வீராச்சாமி (34), மனைவி பாக்கியலட்சுமி (31), மகள் கிருத்திகா (7) ஆகியோா் செவ்வாய்க்கிழமை இரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்தனா். அதிகாலையில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில், தந்தையும், மகளும் பலத்த காயமடைந்தனா். இதையடுத்து, இருவரும் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இது குறித்து தகவல் அறிந்த நிதி அமைச்சா் தங்கம் தென்னரசு, அருப்புக் கோட்டைஅரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று, பாதிக்கப்பட்ட தந்தை, மகளுக்கு ஆறுதல் கூறி, நிதியுதவி வழங்கினாா். திருச்சுழி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.