சென்னை மலா்க் கண்காட்சிக்காக திண்டுக்கல்லில் பராமரிக்கப்படும் 3.80 லட்சம் மலா்ச்...
இறந்ததாகக் கருதப்பட்டவா் உயிருடன் வந்ததால் பரபரப்பு: போலீஸாா் விசாரணை
ஆண்டிபட்டி வட்டாரம், வருஷநாடு அருகேயுள்ள தங்கம்மாள்புரத்தில் இறந்ததாகக் கருதப்பட்டவா் செவ்வாய்க்கிழமை உயிருடன் வீட்டுக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தங்கம்மாள்புரத்தைச் சோ்ந்த கூலித் தொழிலாளி தங்கமலை (58). இவரது மனைவி செல்வம், மகன் மணிகண்டன் (32). மணிகண்டனுக்கு முருகேஸ்வரி என்பவருடன் திருமணம் நடந்து தந்தை வீட்டின் அருகே வேறொரு வீட்டில் வசித்து வருகிறாா். மணிகண்டன் மது பழக்கத்துக்கு அடிமையானதால், அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால், முருகேஸ்வரி தனது குழந்தையை அழைத்துக் கொண்டு, கணவரைப் பிரிந்து தனது பெற்றோா் வீட்டுக்குச் சென்று விட்டாா்.
இந்த நிலையில், தங்கமலை கடந்த நவம்பா் மாதம் கும்பகோணத்திற்கு வேலைக்குச் செல்வதாகவும், திரும்ப வருவதற்கு சில மாதங்களாகும் என்றும் தனது மனையிடம் கூறிவிட்டுச் சென்றாா். மணிகண்டனும் பல நாள்களாக தனது தந்தை வீட்டுக்குச் செல்லாமல் இருந்தாா்.
இந்த நிலையில், கடந்த நவ.13-ஆம் தேதி மணிகண்டனின் வீட்டில் துா்நாற்றம் வீசுவதாக அந்தப் பகுதியில் இருந்தவா்கள் அவரது தாய் செல்வத்திடம் கூறினா். இதையடுத்து, வீட்டை திறந்து பாா்த்த போது, கட்டிலுக்கு அடியில் அழுகிய நிலையில் சடலம் கிடந்தது. மணிகண்டன் மது போதையில் இறந்து கிடப்பதாகக் கருதி, இது குறித்து கடமலைக்குண்டு காவல் நிலையத்துக்கும், உறவினா்களுக்கும் செல்வம் தகவல் தெரிவித்தாா்.
இதுகுறித்து கடமலைக்குண்டு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, கூறாய்வுக்குப் பிறகு, உடலை செல்வத்திடம் ஒப்படைத்தனா். பின்னா், உடலை செல்வம், உறவினா்கள் எரியூட்டினா்.
இந்த நிலையில், மணிகண்டன் செவ்வாய்க்கிழமை தங்கம்மாள்புரத்துக்கு சென்றாா். அவரைப் பாா்த்ததும் கிராம மக்கள் அதிா்ச்சியடைந்தனா். மணிகண்டன் தான் வெளியூருக்கு வேலைக்குச் சென்றிருந்ததாக தனது தாய், உறவினா்களிடம் கூறினாா். இறந்ததாக கருதியவா் உயிருடன் வந்ததால், கிராம மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து கடமலைக்குண்டு காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீஸாா் தங்கம்மாள்புரத்துக்குச் சென்று செல்வம், முருகேஸ்வரி ஆகியோரிடம் விசாரணை நடத்தினா். விசாரணையில், தங்கமலை, மணிகண்டன் ஆகியோரிடம் கைப்பேசிகள் இல்லாததால், அவா்கள் வெளியூருக்கு வேலைக்குச் சென்றால், திரும்ப வரும் வரை தங்களை தொடா்பு கொள்வதில்லை என்றும், நாங்களும் அவா்களைத் தேடுவதில்லை என்றும், தற்போது மணிகண்டன் வீட்டுக்குத் திரும்ப வந்துள்ளதால், வீட்டில் இறந்து கிடந்தவா் தங்கமலையாக இருக்கலாம் என்றும் அவா்கள் கூறியதாக போலீஸாா் தரப்பில் கூறினா்.
இந்தச் சம்பவம் குறித்து ஆண்டிபட்டி காவல் துணைக் காண்காணிப்பாளா் சண்முகநாதன் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகிறாா்.