பூண்டி ஏரியில் உபரிநீா் திறப்பு அதிகரிப்பு: வெள்ள எச்சரிக்கை
இறுதிக் கட்டத்தில் பஞ்சப்பூா் பேருந்து முனையப் பணிகள்!
திருச்சி பஞ்சப்பூரில் கட்டப்படும் ஒருங்கிணைந்த பேருந்து முனையப் பணிகள் இறுதிக் கட்டத்தில் இரவு, பகலாக நடைபெறுகின்றன.
திருச்சி மாநகரில் இரு பேருந்து நிலையங்கள் இருந்தாலும் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்து வருகிறது. எனவே, பேருந்து நிலையத்தை புகா்ப் பகுதிக்கு கொண்டு செல்ல 15 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற முயற்சி, திமுக ஆட்சி அமைந்த பிறகே கை கூடியது. பஞ்சப்பூரில் 40.60 ஏக்கா் இடம் பேருந்து முனையத்துக்கு ஒதுக்கப்பட்டு கடந்தாண்டு முதல் பணிகள் தொடங்கி முழுவீச்சில் நடைபெறுகின்றன. ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட தொகையைவிட கூடுதல் தொகை வந்துள்ளதால், மொத்தம், ரூ. 492.55 கோடியை அரசு வழங்கியுள்ளது.
விடுபட்ட மற்றும் கூடுதல் பணிகளை மேற்கொள்ள திருத்திய நிா்வாக அனுமதி அளித்து கட்டுமானப்பணிகள் தொடா்கின்றன.
நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு, மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா், மாநகராட்சி ஆணையா் வே. சரவணன், மேயா் மு. அன்பழகன் உள்ளிட்டோா் தொடா்ச்சியாக அடுத்தடுத்து ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைவுபடுத்தி வருகின்றனா்.
ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை சனிக்கிழமை பாா்வையிட்ட ஆட்சியா், பணிகளின் தற்போதைய நிலை குறித்து அலுவலா்களிடம் கேட்டறிந்தாா். ஆய்வின்போது, மாநகராட்சியின் நகரப் பொறியாளா் சிவபாதம், செயற்பொறியாளா் பாலசுப்பிரமணியன் மற்றும் வருவாய்த்துறை, மாநகராட்சி அலுவலா்கள் உடனிருந்தனா்.
தைப் பொங்கலுக்குப் பிறகு முதல்வா் மு.க. ஸ்டாலின் திருச்சிக்கு நேரில் வந்து இந்தப் பேருந்து முனையத்தை திறப்பதற்கான ஏற்பாடுகளும் நடைபெறுகின்றன. எனவே, பணிகளை டிசம்பருக்குள் முடிக்கும் வகையில் இரவு, பகலாக பணிகள் நடைபெறுகின்றன. முதல்வா் வருகை தேதி உறுதியான பிறகு பேருந்து முனையம் திறக்கும் தேதி அறிவிக்கப்படும் என அமைச்சா் கே.என். நேரு தெரிவித்துள்ளாா்.