கரோனா தடுப்பூசிக்கும் திடீா் மரணங்களுக்கும் தொடா்பில்லை -மத்திய அரசு
"DGP சார், எந்த கழிவறை வழுக்குமோ அங்கு இந்த காவலர்களை விசாரிக்க வேண்டும்" - திமுக எம்.எல்.ஏ
திருப்புவனம் பகுதி மடப்புரம் இளைஞர் அஜித்குமார் என்பவர், நகை காணாமல் போன புகாரில் தனிப்படை போலீஸார் விசாரணை என்ற பெயரில் அடித்துத் துன்புறுத்தியதால் கடந்த சனிக்கிழமை உயிரிழந்தார்.
இதில் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் 6 முதலில் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
பிரச்னை பெரிதாகவே இச்சம்பவம் கொலை வழக்காகப் பதிவுசெய்யப்பட்டு நேற்று முன்தினம் இரவு 5 போலீஸார் கைதுசெய்யப்பட்டனர்.
மதுரை உயர் நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்ற விசாரணையில், காவல்துறையை நீதிபதிகள் சரமாரியாகக் கேள்விகேட்டனர்.

இவ்வாறு கடந்த சனிக்கிழமை முதலே இப்பிரச்னை பரபரப்பாக இருக்கும் சூழலில், அஜித்குமார் உயிரிழந்து மூன்று நாள்களாக பேசாத முதல்வர் ஸ்டாலின், நான்காவது நாளான நேற்று அஜித்குமாரின் தாயாரிடம் தொலைபேசியில் ஆறுதல் தெரிவித்தார்.
அடுத்த சில மணிநேரங்களில், இந்த வழக்கின் விசாரணையை சி.பி.சி.ஐ.டி-யிடமிருந்து சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிட்டார் ஸ்டாலின்.
ஆனால், இதற்கிடையில் திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி திமுக எம்.எல்.ஏ இனிகோ இருதயராஜ், முகநூல் மற்றும் எக்ஸ் தளத்தில் காவல்துறையை கடுமையாக விமர்சித்திருந்தார்.
அந்தப் பதிவில் இனிகோ இருதயராஜ், "DGP சார், கைது செய்யப்பட்ட காவலர்கள் வழுக்கி விழுந்து கட்டுபோடப்படுவார்களா? அல்லது தப்பி ஓட முயற்சி என்று ஏதாவது நல்ல செய்தி வருமா?
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் கோயில் காவலாளி, இளைஞர் 27 வயதே ஆன அஜித்குமார் காவல்துறையினரால் கொடூரமாகத் தாக்கப்பட்டு மரணம் அடைந்ததிருப்பது மிக மிகக் கண்டனத்துக்கு உரியது.
காவல்துறை என்கிற பெயரில் மனித மிருகங்களாக மாறி அஜித்குமாரை கொடூரமாகத் தாக்கிக் கொன்றிருக்கிறார்கள் இந்த மனித பிண்டங்கள்.

ஒரு திருட்டு வழக்கை இப்படித்தான் விசாரிக்க வேண்டுமா என்ன? மனித உயிரின்மீது அக்கறை இல்லாத, குரூரபுத்தி கொண்ட தமிழக காவல்துறையைச் சேர்ந்த இவர்களைக் கைதுசெய்து உத்தரவிட்டிருக்கிறது அரசு.
கைதுசெய்யப்பட்ட இவர்கள் விசாரணை என்கிற பெயரில் கழிவறையில் வழுக்கி விழுவார்களா? அல்லது தப்பி ஓடினார்கள் என்று சொல்லி என்கவுண்டர் செய்யப்படுவார்களா?
சாமானியனுக்கு ஒரு நியாயம் காவல்துறைக்கு ஒரு நியாயமா? எப்படி பார்த்தாலும் விசாரணை என்கிற பெயரில் கொடூர தாக்குதல் நடத்தி ஒரு மனித உயிரை எடுத்த இவர்களுக்கு எந்த கட்டத்திலும் மன்னிப்பு கிடைக்கக் கூடாது.
காவல்துறை அஜித்குமாரை தாக்கும் அந்த வீடியோ காட்சியைப் பார்த்தால் திருட்டு வழக்கிற்கு இப்படிதான் நடவடிக்கை எடுக்குமா காவல்துறை என்கிற ரீதியில் ரத்தம் உறைந்து போகிறது.
கட்சியில் யாரும் தவறு செய்தால் பல வருடம் நமக்காக உழைத்த கட்சியினர் என்று பாராமல்கூட உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
ஆனால், காவல்துறைமீது மட்டும் ஏன் இந்த மென்மை போக்கு? இவர்கள் உடனடியாகக் கட்டாயம் தண்டிக்கப்பட்டே ஆக வேண்டும்.

இந்த மிருகங்களுக்கு அதிகபட்ச தண்டனை கொடுக்கப்பட வேண்டும். DGP சார், இந்தக் காவலர்கள் எந்த கழிவறை வழுக்குமோ அங்கு அழைத்து சென்று விசாரிக்க வேண்டும் அல்லது எங்கு தப்பித்துச் செல்ல வசதியாக இருக்குமோ அங்கு சென்று விசாரிக்கப்படவேண்டும்." என்று பதிவிட்டிருந்தார்.
ஆனால், இன்னொருபக்கம் அடுத்தடுத்து ஸ்டாலின் ட்வீட்டுகள் வெளியாக, இனிகோ இருதயராஜ் முகநூல் மற்றும் எக்ஸ் தளத்தில் தனது இந்தப் பதிவை நீக்கினார்.