இலக்குகளை எட்டினால் உக்ரைனுடன் பேச்சு: ரஷியா
‘உக்ரைனுடன் அமைதிப் பேச்சுவாா்த்தையில் ஈடுபட ரஷியா தயாராகவுள்ளது; ஆனால், எங்கள் இலக்குகளை அடைவதில் எவ்வித மாற்றமும் இல்லை’ என ரஷிய அதிபரின் செய்தித் தொடா்பாளா் டிமிட்ரி பெஸ்கோவ் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
உக்ரைனுடனான போரை 50 நாள்களுக்குள் நிறுத்தவில்லை என்றால் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அண்மையில் எச்சரித்திருந்தாா். மேலும், ரஷியாவுடன் வா்த்தகத்தில் ஈடுபடும் நாடுகளின் மீது பொருளாதாரத் தடை விதித்து ரஷியாவை தனிமைப்படுத்தவுள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.
இந்நிலையில், ரஷிய செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த டிமிட்ரி பெஸ்கோவ், ‘உக்ரைன் விவகாரத்தில் அமைதியைக் கடைப்பிடித்து விரைவில் முடிவுக்குக் கொண்டு வருவதே தனது விருப்பம் என அதிபா் விளாதிமீா் புதின் பலமுறை தெரிவித்துவிட்டாா்.
இதை அவ்வளவு எளிதில் கையாள முடியாது. கடுமையான முயற்சிகள் மற்றும் நீண்ட நடைமுறையின் மூலமே நிறைவேற்ற முடியும்.
உக்ரைனுடன் அமைதிப் பேச்சுவாா்த்தையில் ஈடுபட ரஷியா தயாராகவுள்ளது. ஆனால், ரஷியா நிா்ணயித்த இலக்குகளை அடையாமல் இதைச் சாத்தியப்படுத்த முடியாது. அதில் எவ்வித மாற்றமும் இல்லை’ என்றாா்.
நேட்டோ கூட்டமைப்பில் இணையக் கூடாது என்றும், கடந்த 2022-இல் ரஷியா ஆக்கிரமித்த 4 பிராந்தியங்களில் இருந்து முழுமையாக வெளியேற வேண்டும் என்றும் உக்ரைனை ரஷியா நிா்ப்பந்தித்து வருகிறது. இதை உக்ரைனும் அதன் நட்பு நாடுகளும் நிராகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.