இலங்கை தமிழர்களின் திருமணங்களை பதிவு செய்ய சிறப்பு முகாம் !
மறுவாழ்வு முகாம்களில் வசித்து வரும் இலங்கைத் தமிழர்களின் திருமணங்களை பதிவு செய்ய சிறப்பு முகாம்களை பத்திரப்பதிவுத் துறை ஏற்பாடு செய்துள்ளது.
இதுகுறித்து பதிவுத்துறைத்தலைவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசித்து வரும் இலங்கை தமிழர்களின் திருமணங்களை பதிவு செய்வதற்காக கடந்த 2018 ஆம் ஆண்டு ஒரு சிறப்பு முகாம் பத்திரப்பதிவுத்துறையால் நடத்தப்பட்டது. 10.12.2018 முதல் திருமண பதிவுகள் இணையவழி வாயிலாக சம்பந்தப்பட்ட திருமண தரப்பினரால் விண்ணப்பித்து திருமண பதிவுகள் நடைபெற்று வருகின்றன.
தற்போது மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களின் திருமணங்களை பதிவு செய்வதற்காக சிறப்பு முகாம்கள் அமைத்து தருமாறு அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையர் அவர்கள் பத்திரப்பதிவுத்துறைக்கு கோரிக்கை கடிதம் அனுப்பி உள்ளார்.
இதனை கருத்தில் கொண்டு மறுவாழ்வு முகாம்களில் வசித்து வரும் இலங்கைத் தமிழர்களின் திருமணங்களை பதிவு செய்வதற்காக சிறப்பு முகாம்கள் நடத்திட பத்திரப்பதிவுத்துறை உரிய ஏற்பாடுகள் செய்துள்ளது. சனிக்கிழமை வேலை நாட்களாக உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் 26.07.2025 சனிக்கிழமை அன்றும் சனிக்கிழமை வேலை நாட்களாக இல்லாத இதர சார்பதிவாளர் அலுவலகங்களில் 25.07.2025 வெள்ளிக்கிழமை அன்றும் மேற்கண்ட திருமணங்களை பதிவு செய்வதற்காக சிறப்பு முகாம்கள் நடத்துவதற்கு பதிவுத்துறை தலைவர் அவர்களால் தொடர்புடைய பதிவு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் 9 கோடி போலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல்: 2 பேர் கைது
இதனை திருமண பதிவிற்காக காத்திருக்கும் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.