'ஆறுதல்... நலம் விசாரிப்பு... சினிமா... அரசியல்...' முதல்வர் - சீமான் சந்திப்பில...
ரூ.1.9 கோடி கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த 4 போ் கைது!
தலைநகரில் போதைப் பொருளான கஞ்சாவை பதுக்கியும், கடத்தியும், விற்பனை செய்து வந்த 4 பேரை தில்லி காவல்துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். அவா்களிடம் இருந்து ரூ1.9 கோடி மதிப்பிலான கஞ்சாவை பறிமுதல் செய்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.
போதைப் பொருள் கடத்தல்காரா்கள் என்று கூறப்படும் 3 போ் துவாரகாவிலிருந்து கைது செய்யப்பட்டனா், அதே நேரத்தில் அவா்களின் விநியோகஸ்தா் ஒடிஷாவிலிருந்து கைது செய்யப்பட்டாா் என்று மூத்த போலீஸ் அதிகாரி கூறினாா்.
இந்த கும்பலின் நகா்வுகள் குறித்து தகவல் கிடைத்ததைத் தொடா்ந்து குற்றப்பிரிவு குழு இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.
‘ரகசியத் தகவலின் அடிப்படையில், கைதானவா்கள் டிரக்கில் இருந்து கஞ்சாவை காரில் மாற்றுவதாக தகவல் கிடைத்தது. அப்போது, துவாரகா செக்டா் 19 அருகே ஒரு டிரக் மற்றும் ஒரு காரை குழு இடைமறித்தது‘ என்று போலீஸ் அதிகாரி கூறினாா். சம்பவ இடத்தில் கைது செய்யப்பட்டவா்கள் லோகேஷ் பரத்வாஜ் (27), ஆஷிஷ் காசா என்ற ஆஷு (20) மற்றும் மொயீன் கான் (24) என அடையாளம் காணப்பட்டதாக போலீசாா் தெரிவித்தனா்.
விசாரணையின் போது, ஒடிஷாவிலிருந்து போதைப்பொருள் பெறப்பட்டதாக அவா்கள் கூறினா். இதனையடுத்து மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில், தில்லி போலீஸ் சிறப்பு படை ஜூலை 10 ஆம் தேதி ஒடிசாவைச் சோ்ந்த கஞ்சா விநியோகிப்பாளா் ஸ்ரீகாந்த் பிரசாத் (33) என்பவரைக் கண்டுபிடித்து கைது செய்தது.
ஹரியானாவின் ரேவாரியில் உள்ள மகேஸ்வரி கிராமத்தில் வசிக்கும் லோகேஷ் மற்றும் ஆஷிஷ் ஆகியோா் விரைவாக பணம் சம்பாரிப்பதற்காக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டதாக போலீசாா் தெரிவித்தனா். நூஹில் வசிக்கும் மொயீன் கான், வாடகை லாரிகளில் போதைப் பொருள்களை கொண்டு செல்வாா்.
பீகாரைச் சோ்ந்த ஸ்ரீகாந்த், முன்பு போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகவும், தில்லி, ஹரியானா மற்றும் பிற மாநிலங்களில் கஞ்சாவை விநியோகிக்க ஒடிஷாவிலிருந்து செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இவா்களிடம் முழுமையான விசாரணை நடத்தப்பட்டு விநியோகச் சங்கிலியைக் கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.