கோலிவுட் ஸ்பைடர்: ரஜினி படம்... அழைப்புக்காகக் காத்திருக்கும் தமன்னா!
சென்னைக்கு வரும்போதெல்லாம் பாடகி சின்மயி வீட்டுக்கு விசிட் அடித்து, அவருடைய ட்வின்ஸ் குழந்தைகளுடன் விளையாடுவதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார் சமந்தா. அதேபோல, ஒவ்வோர் ஆண்டும் சின்மயி வீட்டில் நடக்கும் நவராத்திரி விழாவிலும் கலந்துகொள்ளத் தவறுவதில்லை. நீண்ட நெடுங்காலமாகத் தொடரும் நட்பு இது.
உதயநிதி ஸ்டாலின் நடித்த ‘இது கதிர்வேலன் காதல்’, சசிகுமார் நடித்த ‘சுந்தர பாண்டியன்’, ‘கொம்புவச்ச சிங்கம்டா’ படங்களை இயக்கிய எஸ்.ஆர்.பிரபாகரன், இப்போது தயாரிப்பாளராகியிருக்கிறார். தன்யா ரவிச்சந்திரன் நடிப்பில் ‘றெக்கை முளைத்தேன்’ என்ற படத்தைத் தயாரித்து, இயக்கியிருக்கிறார். தன்யா, இதில் போலீஸ் அதிகாரி. ஆனால், யூனிஃபார்ம் அணியாமல் மஃப்டியில்தான் படம் முழுக்க அவருக்கு டியூட்டியாம்!
முழுக்க முழுக்க இந்திப் படங்களிலேயே அதிக கவனம் செலுத்திவருகிறார் தமன்னா. அங்கே ரோஹித் ஷெட்டி, சித்தார்த் மல்ஹோத்ரா ஆகியோரின் படங்களில் நடித்துவரும் அவர், சமீபத்தில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் அஜய் தேவ்கனின் ‘ரைடு 2’ படத்தில் ஒரு பாடலுக்கு ஆட்டம் போட்டிருக்கிறார். ஏற்கெனவே, ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தில் இதேபோல ஆட்டம்போட்ட தமன்னா, ‘ஜெயிலர்-2’ படத்திலும் ஒரு பாடலுக்கு ஆட வாய்ப்பு வரும் என எதிர்பார்த்துக் காத்திருக்கிறார் என்கிறார்கள்.
ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடித்துவருகிறார் ராகவா லாரன்ஸ். அவரது ஹிட் ஜானரான ‘காஞ்சனா 4’ படத்தைத் தயாரித்து, நடித்துவரும் அவர், அப்படியே லோகேஷ் கனகராஜ் தயாரித்துவரும் ‘பென்ஸ்’ படத்தின் படப்பிடிப்பிலும் பிசி. இவற்றுடன், பெயரிடப்படாத ஒரு தெலுங்குப் படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார் லாரன்ஸ்.
நாகேஷின் பேரனும் ஆனந்தபாபுவின் மகனுமான கஜேஷ் நாகேஷ், ஹீரோவாக நடித்திருக்கும் படம் ‘உருட்டு உருட்டு.’ அந்தப் பட விழாவுக்கு வந்திருந்த இயக்குநர் கஸ்தூரி ராஜா, ‘`தனுஷை அறிமுகப்படுத்தத் தயாரிப்பாளர்களை நான் தேடிப் போகவில்லை. நானே தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும் இருந்தேன். ஆனால், ஆனந்த்பாபு தன் பையனுக்காக ஒவ்வொரு பட கம்பெனிக்கும் போனார். அந்தத் தந்தையினுடைய வலி எனக்கும் தெரியும். அவர் மகன் நடிக்கும் இந்தப் படத்தை வெற்றி பெறச்செய்ய வேண்டும்” என்று பேசவும், மேடையில் நெக்குருகி உட்கார்ந்திருந்தார் ஆனந்த்பாபு.
‘தலைவன் தலைவி’ படத்தின் மூலம் விஜய் சேதுபதி, இயக்குநர் பாண்டிராஜ் இடையேயான நட்பு, வெகுவாக வலுத்திருக்கிறது. ‘`2009-லிருந்து பாண்டிராஜ் சாரை எனக்குத் தெரியும். நான் ‘தென்மேற்குப் பருவக்காற்று’ படத்துக்காக தேசிய விருதை வென்றபோது இருவரும் சந்தித்துப் பேசியிருக்கிறோம். இப்போது அவரது படத்தில் நடித்திருப்பது எனது கரியரில் ஒரு மிகப்பெரிய வட்டம் நிறைவடைந்ததுபோல் இருக்கிறது” என்று நெகிழ்கிறாராம் விஜய் சேதுபதி. இருவரும் மீண்டும் இணைவதற்கான சூழலும் உருவாகியிருப்பதாகக் கூறப்படுகிறது.