நாடாளுமன்ற கூட்டத்தொடர்: கீழடி அறிக்கை விவாதிக்கப்படுமா? திருச்சி சிவா ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று (ஜூலை 21) தொடங்கி ஆகஸ்ட் 21 வரை நடைபெறவுள்ளது.
நாடாளுமன்றத்தைச் சுமுகமாக நடத்துவதற்காக நேற்று நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் திமுக சார்பில் கலந்துகொண்ட டி.ஆர்.பாலு, கீழடி அகழாய்வு ஆய்வு அறிக்கையை வெளியிட வலியுறுத்துவோம் எனக் கூறியிருந்தார்.

இன்று காலையில் கீழடி அகழாய்வு அறிக்கை தொடர்பாக விவாதிக்க வலியுறுத்தி, மாநிலங்களவை திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தலைவர் திருச்சி சிவா ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கியுள்ளார்.
இந்த நோட்டீஸ் சபாநாயகரால் ஏற்கப்படும்பட்சத்தில் நாடாளுமன்றத்தின் வழக்கமான நிகழ்ச்சி நிரல் ஒத்திவைக்கப்பட்டு, கீழடி விவகாரம் விவாதிக்கப்படும்.
பொது மக்களுக்கு முக்கியமான, அவசரமான பிரச்னைகளை உடனடியாக நாடாளுமன்றத்தில் எழுப்புவதற்கு இந்த விதியைப் பயன்படுத்துவர்.
இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பஹல்காம் தாக்குதல் முக்கிய பிரச்னையாக எழுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தாக்குதல் நடத்தியவர்கள் இதுவரை கைது செய்யப்பட்டு, நீதியின் முன் நிறுத்தப்படாதது, அமெரிக்க அதிபர் தானே போரை நிறுத்தியதாகக் கூறிவருவது, 5 இந்திய விமானங்கள் வீழ்த்தப்பட்டதாகக் கூறுவது பற்றிய கேள்விகள் எழுப்பப்படும் என அனைத்துக் கட்சி கூட்டத்துக்குப் பிறகு டி.ஆர்.பாலு தெரிவித்திருந்தார்.

அத்துடன் நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு பிரச்னையை முக்கிய விவகாரமாக எழுப்புவோம் என்றும் கூறியிருந்தார்.
மேலும் பீகாரில் நடைபெறும் சிறப்பு வாக்காளர் திருத்தம், டெல்லி மற்றும் உ.பியில் புல்டோசர் நடவடிக்கைகள் மற்றும் அரசுப் பள்ளிகளை மூடும் உத்தரவு, அகமதாபாத் விமான விபத்து போன்ற விவகாரங்களையும் எதிர்க்கட்சியினர் எழுப்பத் திட்டமிட்டுள்ளனர்.
அத்துடன் இந்தக் கூட்டத்தொடரில் பல முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்படவுள்ளன.
ஆகஸ்ட் 21 வரை நடைபெறும் நாடாளுமன்றத்தில் ரக்ஷபந்தன் மற்றும் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 12 முதல் ஆகஸ்ட் 18 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.