செய்திகள் :

அதானியின் நிலக்கரி திட்டம்: `ஆபத்தாக மாறும் புனித நீரூற்று' - ஆண்டுகள் கடந்தும் எரியும் நெருப்பு!

post image

ஆஸ்திரேலியாவின் மிகப் பெரிய மாகாணங்களில் ஒன்று குயின்ஸ்லாந்து. இந்தப் பகுதியில்தான் தூங்கமபுல்லா நீரூற்றுகள் உள்ளன. இந்த நீரூற்று நீர், நிலம், உயிர்களை உருவாக்கும் கடவுள் சக்தியுடன் தொடர்புடைய முண்டகுட்டா எனும் பழங்குடி மக்களின் மூதாதையரால் உருவாக்கப்பட்டது என அந்தப் பகுதியில் வாழும் பழங்குடி மக்கள் நம்புகின்றனர். இயற்கை எழில் கொஞ்சும் அந்தப் பகுதியில்தான் இயற்கை வளங்கள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

குயின்ஸ்லாந்தின் பழங்குடி மக்கள் போராட்டம்
குயின்ஸ்லாந்தின் பழங்குடி மக்கள் போராட்டம்

நிலக்கரி:

தூங்கமபுல்லா நீரூற்றுகள் வறண்ட நிலத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் பெரும் நிலத்தடி நீருக்கு உயிர்நாடி. இந்த நீரூற்றுகள் கலிலி படுகையின் மேல் அமைந்திருக்கிறது. கலிலி படுகை உலகின் மிகப்பெரிய பயன்படுத்தப்படாத நிலக்கரி இருக்கும் பகுதி. கிட்டத்தட்ட 2,47,000 சதுர கி.மீ. பரப்பளவில், 30 பில்லியன் டன்களுக்கு மேல் நிலக்கரி அங்கிருப்பதாகக் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அதே நேரம் மெல்போர்னில் உள்ள கிரிஃபித் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆஸ்திரேலியாவின் முன்னணி நீர்ப் புவியியலாளர்களில் ஒருவரான பேராசிரியர் மேத்யூ குர்ரெல் உள்பட சில விஞ்ஞானிகள், ``இந்தக் கலிலி படுகையும், தூங்கபுல்லா நீரூற்றுப் பகுதிகளும் சுற்றுச்சூழல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தவை" எனத் தெரிவித்திருக்கின்றனர்.

அதானி நிறுவனக் குறி:

கலிலி படுகையில் நிலக்கரி இருப்பதாக வெளியான ஆய்வுக்குப் பிறகு அதானி நிறுவனமான பிராவஸ், அந்தப் பகுதியில் நிலக்கரி எடுக்க ஆஸ்திரேலிய அரசிடம் அனுமதிக் கோரியது. பழங்குடி மக்களுக்கு வரையறுக்கப்பட்ட நில உரிமைகளை 1993-ல், ஆஸ்திரேலியாவின் பூர்வீக உரிமைச் சட்டம் வழங்குகிறது. அதன் அடிப்படையில் நிலக்கரிச் சுரங்கம் தொடங்க வேண்டுமானால் முதலில் அந்தப் பகுதியில் வசிக்கும் பழங்குடி மக்களுடன் உரையாட வேண்டும்.

வாங்கன் மற்றும் ஜகலிங்கோ பழங்குடி மக்கள் பூர்வீக உரிமைக்கான கோரிக்கையைப் பதிவு செய்து, அதானி குழுமத்துடன் பேச்சுவார்த்தை நடத்தும் உரிமை பெற்றனர். அதானி குழுமம் நிலக்கரிச் சுரங்கம் தொடங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு சில சலுகைகளை அந்த மக்களுக்கு வழங்கியது. ஆனால் 2014 வரை எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. எனவே, அதானி குழுமம் பழங்குடி ஒப்புதல் இல்லாமல், பூர்வீக உரிமை தீர்ப்பாயத்தின் மூலம் ஒப்புதல் கோரியது.

ஜூலை 2014 – ஆஸ்திரேலிய சுற்றுப்புற அமைச்சர் கிறிக் ஹண்ட் (Greg Hunt) ``இந்த நிலக்கரித் திட்டம் வேலை வாய்ப்புகளை உருவாக்கும், நிலக்கரி ஏற்றுமதியை அதிகரிக்கும்" எனக் குறிப்பிட்டு பழங்குடி மக்களின் ஒப்புதல் இல்லாமல் அதானியின் கார்மைக்கேல் நிலக்கரிச் சுரங்கத்தை அங்கீகரிப்பதாக அறிவித்தார். ஆகஸ்டு 2015-ல் சுற்றுப்புற பாதுகாப்பு சட்ட ஒப்புதல் சட்டவிரோதமானதாகக் கருதப்பட்டு, நிறுவன தொடக்க உரிமை நிறுத்தப்பட்டது.

அக்டோபர் 2015 –ல் அந்தச் சட்டம் திருத்தப்பட்டு மீண்டும் ஒப்புதல் வழங்கப்பட்டது. இதற்கிடையில், வாங்கன் - ஜகலிங்கோ (W&J) மக்களின் பாரம்பரிய நிலத்தில் நிலக்கரிச் சுரங்கம் அமைப்பதற்காக, வாங்கன் - ஜகலிங்கோ குடும்ப குழுக்களில் ஏழு குழுக்களிடம் அதானி நிறுவனம் நில ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கியது.

குயின்ஸ்லாந்தின் பழங்குடி மக்கள் போராட்டம்
குயின்ஸ்லாந்தின் பழங்குடி மக்கள் போராட்டம்

இது குறித்து பிபிசி செய்தியிடம் பேசிய வாங்கன் - ஜகலிங்கோ (W&J) குழுவைச் சேர்ந்த ஜாக்கி ப்ரோடெரிக், ``இந்த நிலக்கரித் திட்டம் எங்கள் குடும்பங்களைப் பிரித்துவிட்டது. நிலம் அழிக்கப்படுவது மிகவும் வேதனையாகதான் இருக்கிறது. ஆனால், நாங்கள் சுரங்கத் திட்டத்திற்கு ஒப்புக்கொள்ளாவிட்டாலும், அவர்கள் எப்படியும் இந்தத் திட்டத்தை செயல்படுத்தியிருப்பார்கள். எனவே, இந்தத் திட்டத்திலிருந்து எங்களால் என்ன பெற்றுக்கொள்ள முடிந்ததோ அதை பெற்றுக்கொண்டோம்" என்கிறார்.

ஜூன் 2019-ல் மாநில சுற்றுச்சூழல் திட்டங்களுக்கான இறுதி ஒப்புதல் பெறப்பட்டு, கார்மைக்கேல் நிலக்கரிச் சுரங்கத்தின் கட்டுமான பணிகள் துவங்கப்பட்டது. 2021-ம் ஆண்டு கார்மைக்கேல் சுரங்கத்தின் நிலக்கரி ஆஸ்திரேலிய துறைமுகம் சென்று சேர்வதற்கான வழிமுறைகள் வகுக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. 2022-ம் ஆண்டுமுதல் நிலக்கரி எடுக்கப்படுகிறது.

ஆபத்தாக மாறும் நீரூற்று:

கிரிஃபித் பல்கலைக்கழக பேராசிரியர் மேத்யூ குர்ரெல் உள்பட சில விஞ்ஞானிகள், ``நிலக்கரிச் சுரங்கம் தொடங்கப்பட்டதற்குப் பிறகு நாங்கள் சில விஷயங்களை கவனித்தோம். அவ்வப்போது அந்த ஊற்று நீரில் ஹைட்ரோகார்பன்கள் கண்டறியப்பட்டன. சுரங்கம் தொடங்கிய பிறகுதான் ஹைட்ரோகார்பன்கள் அதிகமாகிவிட்டன என்றால், அதற்கான காரணத்தை விளக்க வேண்டும்.

இது சுரங்க நடவடிக்கைகளுடன் தொடர்புடையதாக இருந்தால், ஊற்று நீரின் தரம் உடனடியாக பெரும் ஆபத்தை விளைவிக்கும் என்பதற்கான எச்சரிக்கை இது. சுரங்கத்தால் ஏற்படும் தாக்கம், அனுமதி அளிக்கப்பட்டபோது கணிக்கப்பட்டதைவிட அதிகமாக இருப்பதற்கான அறிகுறிகளை காண்கிறோம். இதனால், அந்த அனுமதியை முழுமையாக மறு மதிப்பீடு செய்ய வேண்டும்" என்று அவர் வலியுறுத்துகிறார்.

குயின்ஸ்லாந்தின் பழங்குடி மக்கள் போராட்டம்
குயின்ஸ்லாந்தின் பழங்குடி மக்கள் போராட்டம்

எதிர்ப்பும் - போராட்டமும்:

இந்த நிலக்கரிச் சுரங்க நிலக்கரிகள் எடுத்துச் செல்லும் வழிவகைகளை ஏற்படுத்திய போதே வாங்கன் மற்றும் ஜகலிங்கோ பழங்குடியின மக்கள் போராட்டத்தைத் தொடங்கிவிட்டன. பழங்குடி நிலத்தின் நிலக்கரியால் ஏற்பட்ட தூசி நிறைந்த பகுதியில், 1,300 நாட்களுக்கும் மேலாக, பாரம்பரிய சடங்கு முறைப்படி நெருப்பு ஒன்று எரிக்கப்படுகிறது.

இந்தப் போராட்டத்துக்கு தலைமை தாங்கும் ஏட்ரியன் பர்ரகுப்பா மற்றும் அவரது மகன் கோடி மெக்காவோய், ``எங்களின் புனித நீரைப் பாதுகாக்கவும், எங்கள் கலாசாரத்தையும், வாழ்வாதாரத்தையும் பாதுகாக்கும் போராட்டமாக கருதுகிறோம். இந்த நாடுதான் என் வரலாற்றையும், நான் யார் என்பதையும், என் மூதாதையர்கள் பற்றிய அறிவையும் தெரிந்துகொள்ளும் பாதை. ஆனால், என் நிலத்தில் உருவாகியிருக்கும் ஒரு சுரங்கம் என் நாட்டையே அழிக்க முயல்கிறது.

சுரங்க நடவடிக்கைகள், நிலத்தடி நீரில் முதலில் எதிர்பார்த்ததைவிட அதிக தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதற்கான பல புதிய சான்றுகள் தற்போது வெளியாகி வருகின்றன.'' எனக் குறிப்பிட்டிருக்கின்றனர். மேலும், இந்த நிலக்கரிச் சுரங்கம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டிருக்கிறது.

அதானி நிறுவன நிலைப்பாடு:

பேராசிரியர் மேத்யூ குர்ரெல் மற்றும் டாக்டர் ஆங்கஸ் கேம்ப்பெல் இணைந்து எழுதி, 2024-ல் மதிப்பாய்வு செய்யப்பட்ட ஆய்வில், "அதானியின் பிராவஸின் நிலக்கரியால் நிலத்தடி நீர் பெரும் ஆபத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தும் நிலைக்கு செல்கிறது" எனக் குறிப்பிட்டிருந்தது. இந்த ஆய்வறிக்கையை முற்றிலுமாக மறுத்த அதானி நிறுவனம், 'இந்த ஆய்வை மேற்கொண்ட ஆசிரியர்களில் சிலர் நிலக்கரிக்கு எதிராகப் பிரசாரம் செய்பவர்கள்' எனக் குற்றம்சாட்டியிருக்கிறது.

குயின்ஸ்லாந்தின் பழங்குடி மக்கள் போராட்டம்
குயின்ஸ்லாந்தின் பழங்குடி மக்கள் போராட்டம்

மேலும் பிரவாஸ் நிறுவனம், 'கார்மைக்கேல் சுரங்கம் நிலத்தடி நீரில் ஏற்படுத்தும் தாக்கம்' என்ற தலைப்பில் பகுப்பாய்வு செய்து, ஆஸ்திரேலியாவின் தேசிய அறிவியல் முகமை (CSIRO)யிடம் ஒப்படைத்தது. CSIRO 2023-ல் மதிப்பாய்வு செய்து, ``அதானி குழுமத்தின் பகுப்பாய்வு நீரூற்றுகளில் சுரங்கத்தின் தாக்கத்தை மதிப்பிடுவதற்கு ஏற்றவை அல்ல" எனக் குறிப்பிட்டிருக்கிறது. இந்த மதிப்பாய்வும் நீதிமன்ற வழக்கில் ஆராயப்படும் ஆதாரங்களின் ஒரு பகுதியாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்த மதிப்பாய்வுக்குப் பிறகு கடந்த 2023-ல், அதானி - பிராவஸின் நிலக்கரிச் சுரங்கத்தால், தூங்கமபுல்லா நீரூற்றுகளில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்த தீர்வான தரவுகள் எதுவும் இல்லாத காரணத்தால் சுரங்கத் திட்டம் தற்காலிகமாக தடை செய்யப்பட்டது. இந்தத் தடையை எதிர்த்து அதானி நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.

அந்த வழக்கின் மனுவில், ``நாங்கள் நிலத்தடி நீர் விதிமுறைகளை மீறவில்லை. தற்போது செய்யும் அல்லது எதிர்காலத்தில் செய்ய அனுமதிக்கப்பட்ட சுரங்க நடவடிக்கைகளால் தூங்கமபுல்லா நீரூற்றுக்கு எந்த ஆபத்தும் இல்லை. இந்த நிலக்கரிச் சுரங்கத்துக்காக, தொழிலாளர்கள் பலர் வசிக்கும் நகரத்தில் 486 மில்லியன் டாலருக்கும் அதிகமாக முதலீடு செய்துள்ளோம்.

புதைபடிவ எரிபொருள் எதிர்ப்பு இயக்கத்தில் ஏட்ரியன் பர்ரகுப்பாவும் அவரது கூட்டாளிகளும் பல ஆண்டுகளாக எங்கள் நிறுவனத்தை இழிவுபடுத்தவும், குயின்ஸ்லாந்து மற்றும் ஆஸ்திரேலிய சட்டத்தின்படி, பாதுகாப்பாகவும், பொறுப்புடனும் செயல்பட்டு வரும் எங்கள் கார்மைக்கேல் சுரங்கத்தை நிறுத்தவும் முயன்றனர். இன்னும் சொல்வதானால் வாங்கன் - ஜகலிங்கோ பழங்குடிகள் இந்தப் பகுதியின் பூர்வகுடிகளே இல்லை" என வாதிட்டது.

அணையா நெருப்பு
அணையா நெருப்பு

இந்த விவகாரம் குயின்ஸ்லாந்தில் தீவிரமானதைத் தொடர்ந்து, இது குறித்தக் கேள்விக்கு பதிலளித்த குயின்ஸ்லாந்து சுற்றுச்சூழல் அமைச்சர் ஆண்ட்ரூ பவல், ``நீரூற்றுகளின் கலாசார, சுற்றுச்சூழல் மதிப்புகளைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க நாங்கள் உறுதியாக இருக்கிறோம்"எனக் குறிப்பிட்டிருக்கிறது.

இது தொடர்பாக மேல்முறையீடு செய்திருக்கும் ஏட்ரியன் பர்ரகுப்பா, ``கார்மைக்கேல் சுரங்கத்திற்கு ஒப்புதல் அளித்த அரசின் முடிவு, ஆஸ்திரேலியாவை கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளாக இரு துருவங்களாகப் பிரித்துள்ளது. இந்த வழக்கு, குயின்ஸ்லாந்து மனித உரிமைச் சட்டத்தின் பிரிவு 28ஐ அடிப்படையாகக் கொண்டது.

இது பழங்குடி மக்களின் கலாசாரத்தைப் பின்பற்றுவதற்கும், நிலம் மற்றும் நீருடனான தொடர்பைப் பேணுவதற்குமான உரிமையைப் பாதுகாக்கிறது. கலாசாரத்தையும் நாட்டையும் பாதுகாக்க விரும்பும் பிற பூர்வீக மக்களால் பின்பற்றப்படும் ஒரு முக்கியமான வழக்காக இது அமையும்.' எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

அணையா நெருப்பு - போராட்டம்
அணையா நெருப்பு - போராட்டம்

பின்னணியில் மோடி?:

இந்தியாவின் பிரதமர் மோடி 2014-ம் ஆண்டு மே 26-ம் தேதி இந்தியாவின் 14-வது பிரதமராக பதவியேற்றார். பதவியேற்ற மூன்றாம் மாதம் அதாவது நவம்பர் மாதம் ஆஸ்திரேலியா பயணமானார். அப்போது பிரதமர் மோடியுடன் அதானியும் சென்றதாக தகவல் வெளியாகி சர்ச்சையானது. மேலும், அதானி குழுமம் அங்கு செயல்படுத்த விரும்பியிருந்த Carmichael நிலக்கரி சுரங்கத் திட்டத்துக்காக, இந்தியாவின் State Bank of India (SBI) $1 பில்லியன் டாலர் கடனை வழங்க ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) செய்தது.

இது தொடர்பாக அப்போதே காங்கிரஸ் தலைவர் அஜய் மக்கன், ``பிரதமர் மோடி பொதுமக்கள் பணத்தில் ஆஸ்திரேலியா சென்று, அதானிக்காக நேரடியாக வியாபார பேச்சுவார்த்தை நடத்துகிறார்” என விமர்சித்தார். இதற்கு பா.ஜ.க தரப்பில் மறுப்பு தெரிவித்தபோது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், ``சாட்சியம் தேவைப்படுகிறதா? பிரதமர் முன் அந்த பிஸ்னஸ் மேன் (அதானி) உட்கார்ந்திருக்கிறார். MoU கையெழுத்தாகியுள்ளது. இதுதானே சாட்சியம்?” எனக் காட்டமாக தெரிவித்திருந்தார்.

பிரதமர் மோடி ஆஸ்திரேலியா பயணம்
பிரதமர் மோடி ஆஸ்திரேலியா பயணம் - அதானி

SBI கடன் கொடுத்ததா?

அப்போதைய SBI தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா, ``அதானி நிறுவனத்துக்கு கடன் கொடுப்பதற்கான ஒப்புதல் எதுவும் வழங்கவில்லை. MoU என்பது ஒரு பரிசீலனை மட்டுமே. எல்லா தகவல்களும் சரிபார்க்கப்பட்ட பிறகு தான் கடன் வழங்க முடியும்." என விளக்கமளித்தார். .

2015 மார்ச் மாதத்தில், குறைந்த நிலக்கரி விலை, திட்டத்தின் தொழில்நுட்ப சிக்கல்கள், வருமான அபாயம் போன்ற காரணங்களைக் குறிப்பிட்டு, SBI $1 பில்லியன் கடனை வழங்க மறுத்தது. 2020-ம் ஆண்டு இந்த கடன் வழங்கும் விவகாரத்தை மீண்டும் SBI பரிசீலித்ததாக தகவல் வெளியானபோது பல்வேறு பறவையியல் அமைப்புகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் அது மீண்டும் நிறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

ஓரணியில் தமிழ்நாடு: `மக்களிடம் OTP விவரங்களைக் கேட்கக் கூடாது!' - உயர் நீதிமன்றம் தடை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் இருக்கும் நிலையில் இப்போதே `ஓரணியில் தமிழ்நாடு' என்ற பெயரில் முதல்வர் ஸ்டாலினின் உத்தரவின்பேரில் மாநிலம் முழுவதும் வீடு வீடாகச் சென்று உறுப்பினர்கள... மேலும் பார்க்க

`நடைபயிற்சியின் போது லேசான மயக்கம்' - அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின் அனுமதி

முதல்வர் ஸ்டாலின் இன்று காலையில் வழக்கமான நடைபயிற்சி மேற்கொண்டபோது அவருக்கு லேசான மயக்கம் ஏற்பட்டதைத்தொடர்ந்து சென்னை அப்போலோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.அபோல்லோ மருத்துவமனை அறிக்க... மேலும் பார்க்க

`மாநில அரசின் கடமை; முதல்வர் தலையிட்டு தீர்வு காண்பார்கள் என்று நம்புகிறேன்!’ - ஜோதிமணி

"2024-2025 ஆம் ஆண்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட பணிகளுக்கு ஆறு மாதங்களுக்கு மேலாகியும் இன்னும் சாத்தியக்கூறு கூட வரவில்லை. கரூர் சட்டமன்றத் தொகுதிக்குள் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒதுக்கீடு செய்யப்பட நி... மேலும் பார்க்க

தர்மஸ்தலா கோயில்: 100-க்கும் மேற்பட்ட பெண்கள் புதைப்பு? குவியும் புகார்கள்; புலனாய்வுக் குழு அமைப்பு

கர்நாடகா மாநிலம் தட்சின கன்னடாவில் உள்ளது தர்மஸ்தலா. இங்கே மஞ்சு நாதர் கோயில் உள்ளது. இது மிகவும் பிரசித்தி பெற்ற கோயில் ஆகும்.தூய்மைப் பணியாளரின் புகார் கடந்த ஜூன் மாதம், தர்மஸ்தலா மஞ்சு நாதர் கோயில்... மேலும் பார்க்க

`லாக்கப் டெத், கீழடி அறிக்கை, மகளிர் இடஒதுக்கீடு’ - நாடாளுமன்றத்தில் அதிமுக எழுப்பும் விவகாரங்கள்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று (ஜூலை 21) முதல் தொடங்குகிறது. இந்தக் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 21 வரை ஒரு மாத காலம் நடைபெறவிருக்கிறது.இதனை முன்னிட்டு, நேற்று நாடாளுமன்ற அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்... மேலும் பார்க்க