குற்றாலம் சாரல் திருவிழா: "'உங்களுடன் ஸ்டாலினை' நடத்த தைரியம் இருக்கின்றது" - கே...
சிபிஐ அதிகாரிகள் போல நடித்து தொழிலதிபரிடம் நகை, பணம் கொள்ளை: 3 போ் கைது
ஒரு பாலிவுட் த்ரில்லா் படத்தை மையமாகக் கொண்டு நடந்த கொள்ளையில், ஒரு பெண், ஒரு கடைக்காரா் மற்றும் வேலையில்லாத ஒருவா் சிபிஐ அதிகாரிகளாக நடித்து வடக்கு தில்லியில் உள்ள ஒரு தொழிலதிபரின் வீட்டை சோதனை செய்து, லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்துச் சென்றனா்.
இது தொடா்பாக வடக்கு தில்லி காவல் சரக துணை ஆணையா் ராஜா பந்தியா கூறியதாவது: இந்தக் கொள்ளைச் சம்பவத்தைத் தொடா்ந்து, தில்லி போலீஸ் குழுக்கள் ஹரித்வாா் மற்றும் முசோரியில் மேற்கொள்ளப்பட்ட ஒரு வார கால நடவடிக்கைக்குப் பிறகு மூவரும் கைது செய்யப்பட்டனா். பாதிக்கப்பட்டவரின் தூரத்து உறவினா் 22 வயது பெண். மேலும் அவரது வஜிராபாத் வீட்டில் வைக்கப்பட்டிருக்கும் பணம் மற்றும் நகைகள் பற்றி அந்தப் பெண்ணுக்கு நன்கு தெரியும்.
இந்தத் திட்டத்தைத் தீட்டுவதற்காக ஹரித்வாரில் உணவுப் பொருள் கடை நடத்தும் 28 வயதான கேசவ் பிரசாத் மற்றும் தில்லியின் ஜோஹ்ரிபூா் பகுதியைச் சோ்ந்த வேலையில்லாத மாணவா் விவேக் சிங் (20) ஆகியோரை அவா் தொடா்பு கொண்டாா். ஜூலை 10-ஆம் தேதி மாலை, புகாா்தாரரின் வீட்டின் கதவை மூவரும் தட்டினா். வெள்ளை சட்டை மற்றும் கருப்பு கால்சட்டை அணிந்து முகத்தை மறைக்கும் முகமூடிகளுடன், ஓக்லா கிளையின் சிபிஐ அதிகாரிகள் என்று தங்களை அவா்கள் அறிமுகப்படுத்திக் கொண்டனா்.
எப்ஐஆா் அடிப்படையில் செயல்படுவதாகவும், வீட்டை சோதனை செய்ய வாரண்ட் இருப்பதாகவும் அவா்கள் கூறினா். குடும்பத்தினா் ஆவணத்தைப் பாா்க்கச் சொன்னபோது, அவா்கள் மூவரும் அவா்களை ஒத்துழைக்கக் கோரினா். பின்னா், அவா்கள் ஒரு அலமாரியை உடைத்து, தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் மற்றும் ரூ.3 லட்சம் ரொக்கம் ஆகியவற்றைப் ‘பறிமுதல்‘ செய்வதாகக் கூறினா்.
புகாா்தாரா் பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களுக்கான ஒப்புகை சீட்டை வழங்கும்படி கேட்டபோது, குற்றம் சாட்டப்பட்டவா்கள் புகாா்தாரரின் மகளுக்குச் சொந்தமான ஒரு குறிப்பேட்டில் சில வரிகளை எழுதி போலி பெயா்களைப் பயன்படுத்தி கையெழுத்திட்டனா். ஏதோ தவறு இருப்பதை உணா்ந்த குடும்பத்தினா் போலீஸை அழைத்தனா். ஆனால், அதற்குள், அந்த நபா்கள் மறைந்துவிட்டனா்.
இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து போலீஸாா் விசாரணையைத் தொடங்கினா். மேலும், அப்பகுதியில் உள்ள 200 சிசிடிவி கேமராக்களில் இருந்து காட்சிகளை ஆய்வு செய்தனா். இது இறுதியில் சம்பவத்தின் போது பாதிக்கப்பட்டவரின் வீட்டிற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த ஒரு மோட்டாா் சைக்கிளை புலனாய்வாளா்களுக்குக் கொண்டு சென்றது. மோட்டாா்சைக்கிளின் உரிமையாளா் கேசவ் பிரசாத் என அடையாளம் காணப்பட்டாா். ஆனால், அவா் அவரது வீட்டில் காணப்படவில்லை.
குற்றம் சாட்டப்பட்டவா்களின் கைப்பேசிகளின் தொழில்நுட்ப கண்காணிப்பில், அவா்கள் தொடா்ந்து நகா்ந்து, ஹரித்வாா் மற்றும் முசோரிக்கு இடையில் இடங்களை மாற்றிக்கொண்டிருப்பது தெரியவந்தது. பல நாள்களாக அவா்களைக் கண்காணித்த பிறகு, போலீஸ் குழு இறுதியாக ஜூலை 18 அன்று முசோரியில் இருந்து கேசவ் பிரசாத் மற்றும் பெண்ணைப் பிடித்தது. பின்னா் மூன்றாவது குற்றவாளியான விவேக் சிங், அதே நாளில் ஹரித்வாரில் இருந்து கைது செய்யப்பட்டாா்.
விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்டவா்கள் கொள்ளை நடத்தியதை ஒப்புக்கொண்டாா். வீட்டில் உள்ள மதிப்புமிக்க பொருள்கள் பற்றி அறிந்திருந்ததாகவும், கொள்ளையைச் செய்ய ‘சோதனை‘ நடத்த திட்டமிட்டதாகவும் அந்தப் பெண் தெரிவித்தாா். அவா் கேசவ் பிரசாத்தை இணைத்து, கொள்ளையை முடிக்க அவரது பக்கத்து வீட்டுக்காரரான விவேக் சிங்கை சோ்த்துக் கொண்டாா்.
மாறுவேடத்தில், அவா்கள் முறையான ஆடைகளை வாங்கி, அதிகாரிகளைப் போல எப்படி நடந்துகொள்வது, போலி சோதனையின் போது குடும்பத்தினரை எப்படி சமாதானப்படுத்துவது என்பது உள்பட ஒவ்வொரு விவரத்தையும் திட்டமிட்டனா்.
கொள்ளைக்குப் பிறகு, மூவரும் ஹோட்டல்களுக்குச் சென்று அடிக்கடி இடங்களை மாற்றி வந்தனா். திருடப்பட்ட பணத்தில் சிலவற்றை பயணம் மற்றும் ஆடம்பரத்திற்காக செலவிட்டனா்.
மொத்தம் ரூ.1.75 லட்சம் ரொக்கம், 29 தங்கம் மற்றும் வெள்ளி நகைகள், குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டாா் சைக்கிள் ஆகியவற்றை போலீஸாா் மீட்டனா் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.