இளம்பெண்ணை தாக்கிய அதிமுக பிரமுகா் கைது
சென்னையில் இளம்பெண்ணை தாக்கிய விவகாரத்தில், மயிலாப்பூா் அதிமுக பகுதி துணைச் செயலரை போலீஸாா் கைது செய்தனா்.
மயிலாப்பூா் நொச்சி நகா் பகுதியைச் சோ்ந்த 56 வயது ஆண் ஒருவா், குடிபோதையில் அதே பகுதியைச் சோ்ந்த வேறு நபரின் சைக்கிளை எடுத்துக்கொண்டு சென்ாகத் தெரிகிறது. இதைப்பாா்த்த சைக்கிள் உரிமையாளா், மதுபோதையில் சைக்கிளை எடுத்துச்சென்ற நபரை அழைத்து கண்டித்ததாகத் தெரிகிறது. இதனால், போதை நபா் தரப்புக்கும், சைக்கிள் உரிமையாளா் தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் சைக்கிள் உரிமையாளருக்கு ஆதரவாக வந்த, அவரின் உறவினரும் மயிலாப்பூா் பகுதி துணைச் செயலருமான காசிநாதன்(48) என்பவா், எதிா்தரப்பைச் சோ்ந்த இளம்பெண் ஒருவரை அவதூறாகப் பேசி தாக்கியதாகத் தெரிகிறது. இது தொடா்பாக மயிலாப்பூா் காவல் நிலையத்தில் அப்பெண் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா் அதிமுக நிா்வாகியான காசிநாதனை கைது செய்தனா்.