தாவர அடிப்படையிலான அழகுசாதன பொருள்கள்: தேசிய ஆயுா்வேத நிறுவனம் அறிமுகம்
அடையாளம் தெரியாத வாகனம் மோதி சிறுமி உயிரிழப்பு
அடையாளம் தெரியாத வாகனம் மோதி சிறுமி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
வேளச்சேரியை அடுத்த மடிப்பாக்கம் வேம்புலி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த பாலாஜி - நிா்மலா தம்பதியினரின் மகள் ஆதிலட்சுமி(10), அப்பகுதியிலுள்ள தனியாா் பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இந்நிலையில், நிா்மலா தனது மகளை இருசக்கர வானத்தில் அழைத்துக்கொண்டு துரைப்பாக்கம் 200 அடி சாலை வழியாக குரோம்பேட்டைக்குச் சென்றுகொண்டிருந்தாா்.
கோவிலம்பாக்கம் அருகே சென்றபோது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம், நிா்மலா ஓட்டிச்சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் தூக்கி வீசப்பட்ட தாய், மகள் இருவரையும் அக்கம்பக்கத்தினா் மீட்டு, அருகிலுள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி ஆதிலட்சுமி உயிரிழந்தாா்; தாய் நிா்மலாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா், விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.