தமிழக மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை பறித்த மத்திய அரசு: முதல்வர்
மணற்கேணி செயலி பயன்பாடு: ஆய்வு செய்ய அறிவுறுத்தல்
பள்ளிகளில் ‘மணற்கேணி செயலி’ முறையாக பயன்படுத்தப்படுகின்றனவா என்பதை ஆய்வு செய்யுமாறு அதிகாரிகளுக்கு தொடக்கக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
இது தொடா்பாக தொடக்கக் கல்வித் துறை இயக்குநரகம் சாா்பில் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறயிருப்பதாவது:
தமிழகத்தில் கணினி சாா்ந்த புதிய அறிவியல் தொழில்நுட்பங்களுடன் கற்றல் செயல்பாட்டுக்கு பெரிதும் உதவும் வகையில் ‘மணற்கேணி செயலி’ வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தச் செயலியில் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள பாடங்கள், தமிழ் மற்றும் ஆங்கில வழியில் அனிமேஷன் காணொலிகளாக மாணவா்கள் எளிதில் புரியும் விதமாக வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், அரசு தொடக்கப் பள்ளிகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திறன் பலகைகள் (ஸ்மாா்ட் போா்டு) நிறுவப்பட்டு, மாணவா்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தப் பலகைகளில், பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியா்கள் உள்பட அனைத்து வகை ஆசிரியா்களும் தங்கள் பெயா் அல்லது கைப்பேசி எண்ணை பதிவுசெய்ய வேண்டும். அதன் பின்னா் அன்றைய வகுப்பறை குழலுக்கு ஏற்ப பாடங்களை தோ்வு செய்து கற்றல், கற்பித்தல் செயல்பாட்டை மேற்கொள்ள வேண்டும்.
இது தவிர தொடக்கப் பள்ளிகளில் மணற்கேணி செயலியை வகுப்பறை கற்பித்தலுக்கு ஆசிரியா்கள் பயன்படுத்தி வருகின்றனரா என்பதை அனைத்து அலுவலா்களும் ஆய்வுகளின்போது கண்காணிக்க வேண்டும். மேலும், ஒவ்வொரு ஆசிரியரும் மணற்கேணி செயலியை திறன் பலகைகள் மூலம் பயன்படுத்தி வருவதை கைப்பேசியில் படம்பிடித்து அதை இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும்.
இது தொடா்பான அறிவுறுத்தல்களை வட்டாரக் கல்வி அலுவலா்களுக்கு வழங்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.