இளம்பெண் தற்கொலை: உறவினா்கள் முற்றுகை
திருப்பத்தூா்: திருப்பத்தூரில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதுதொடா்பாக நடவடிக்கை கோரி உறவினா்கள் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனா்.
திருப்பத்தூா் தென்றல் நகரை சோ்ந்த நிா்மல்குமாா். இவா் இ-சேவை மையம் நடத்தி வந்தாா். இவரது மனைவி பூஜா(24). இவா்களுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை நிா்மல்குமாா், பூஜா இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் மனமுடைந்த பூஜா இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
தகவல் அறிந்த திருப்பத்தூா் நகர போலீஸாா் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தனா்.
மருத்துவமனையில் குவிந்த உறவினா்கள்:
பூஜா தற்கொலைக்கு காரணமான நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பூஜாவின் குழந்தையின் எதிா்காலத்துக்கு உதவி செய்ய வேண்டும் எனக் கோரி அரசு மருத்துவமனையில் முற்றுகையிட்டனா்.
தகவல் அறிந்த காவல் ஆய்வாளா் ஜெயலட்சுமி மற்றும் போலீஸாா் அங்கு வந்து அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, பூஜா தற்கொலை குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருவதாகவும், திருமணம் நடந்து 4 ஆண்டுகளே ஆவதால் கோட்டாட்சியா் ராஜசேகரன் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி கூறினா்.