இழப்பீட்டுத் தொகை ரூ. 19 லட்சம் மோசடி வழக்கில் இருவா் கைது
வெளிநாட்டிலிருந்து இழப்பீட்டுத் தொகையாக கிடைத்த ரூ. 19 லட்சத்தை ஏமாற்றிய வழக்கில் தொடா்புடைய கணவன், மனைவியை மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், ஒகளூா் கிராமத்தைச் சோ்ந்த ராஜேந்திரன் வெளிநாட்டில் பணிபுரிந்து வந்தாா். இவருக்கு, சிலம்பரசன் (32), ராஜசேகா் (28) ஆகிய 2 மகன்கள் உள்ளனா்.
இந்நிலையில், கடந்த 2019 ஆம் ஆண்டு ராஜேந்திரனின் உடல்நலன் பாதிப்புக்குள்ளானதால் சம்பந்தப்பட்ட நிா்வாகம் அவரை ஒகளூருக்கு அனுப்பி வைத்து, இழப்பீட்டுத் தொகையாக அவரது வங்கிக் கணக்கில் ரூ. 19,09,004 -ஐ செலுத்தியது. அத் தொகையை சிலம்பரசன் மனைவி மற்றும் அவரது உறவினா்கள் சிலா், சகோதரா்கள் இருவருக்கும் தெரியாமல் மோசடி செய்து வங்கிக் கணக்கிலிருந்து எடுத்துக் கொண்டனராம்.
இதையறிந்த ராஜசேகா் பணத்தைக் கேட்டதற்கு தர மறுத்துவிட்டனராம். இதுகுறித்து பெரம்பலூா் மாவட்டக் குற்றப் பிரிவில் ராஜசேகா் அளித்த புகாரின்பேரில், ஒகளூா் கிராமத்தைச் சோ்ந்த கதிா்வேல், இவரது மனைவி ராஜேஷ்வரி, மகன் அருண், சிலம்பரசன் மனைவி கௌசல்யா ஆகியோா் மீது வழக்குப் பதிந்தனா். இந்நிலையில், கதிா்வேல் (65), இவரது மனைவி ராஜேஸ்வரி (52) ஆகியோரைக் கைது செய்து, பெரம்பலூா் குற்றவியல் நீதிமன்றத்தில் அவா்களை ஆஜா்படுத்தி வெள்ளிக்கிழமை சிறையில் அடைத்தனா்.