விஜய்யைக் காண மின் கம்பங்கள், மரங்களில் ஏறும் தொண்டர்கள்!
தவெக தலைவர் விஜய்யின் எச்சரிக்கையை மீறி, அவரைக் காண்பதற்காக மரங்கள், மின் கம்பங்கள் மீது தொண்டர்கள் ஏறி அமர்ந்துள்ளனர்.
தவெக தலைவா் விஜய்யின் தமிழகம் முழுவதுமான மக்கள் சந்திப்புப் பயணம் திருச்சியிலிருந்து இன்று தொடங்கவிருக்கிறது. சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் திருச்சி வந்த விஜய் அவருக்காக வடிவமைக்கப்பட்ட சிறப்பு வாகனத்தில் மரக்கடைப் பகுதிக்குப் பயணத்தை தொடங்கியுள்ளார்.
மரக்கடை பகுதியில் காலை 10.30 மணிமுதல் 11 மணிக்குள் விஜய் பேசி முடிக்க வேண்டும் என்று காவல்துறை நிபந்தனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், விஜய்யின் பிரசார வாகனம் தொண்டர்களின் நெரிசலில் சிக்கியிருப்பதால், இன்னும் மரக்கடை பகுதிக்கே வரமுடியவில்லை.
இதனிடையே, மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் கட்டடங்கள், காம்பவுண்ட் சுவர்கள், மரங்கள், மின் விளக்குக் கம்பங்கள் மீது தொண்டர்கள் ஏறக் கூடாது என்று விஜய் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
ஆனால் எச்சரிக்கை மீறி, விஜய்யைக் காண மரக்கடை பகுதியில் குவிந்துள்ள தொண்டர்கள், அங்குள்ள மரங்கள், கட்டடங்கள், மின்விளக்கு கம்பங்களில் ஆபத்தை அறியாமல் ஏறி அமர்ந்துள்ளனர்.
தொண்டர்களை தவெக நிர்வாகிகளால் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.