விஜய் வாகனம் நெரிசலில் சிக்கியது! திருச்சியில் போக்குவரத்து பாதிப்பு!
திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் தவெக தலைவர் விஜய்யின் வாகனம் தொண்டர்களின் கூட்டத்துக்கு மத்தியில் சிக்கியது.
திருச்சி மரக்கடை பகுதியில் காலை 10.30 மணிக்கு பிரசாரத்தை தொடங்க வேண்டும் என்ற நிலையில், இன்னும் விமான நிலையத்தில் இருந்தே விஜய்யின் வாகனம் வெளிவரவில்லை.
தவெக தலைவா் விஜய்யின் தமிழகம் முழுவதுமான மக்கள் சந்திப்புப் பயணம் திருச்சியிலிருந்து இன்று தொடங்கவிருக்கிறது. சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் திருச்சி வந்த விஜய் அவருக்காக வடிவமைக்கப்பட்ட சிறப்பு வாகனத்தில் மரக்கடைப் பகுதிக்குப் பயணத்தை தொடங்கியுள்ளார்.
மரக்கடை பகுதியில் காலை 10.30 மணிமுதல் 11 மணிக்குள் விஜய் பேசி முடிக்க வேண்டும் என்று காவல்துறை நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால், விமான நிலையத்தில் இருந்து வழிநெடுங்க ஆயிரக்கணக்கான தொண்டர்கள் விஜய்யை காண குவிந்துள்ளனர்.
இதனால், விமான நிலையத்தில் இருந்தே விஜய்யின் வாகனம் வெளியே வரமுடியாத நிலையில், ஆயிரக்கணக்கான தொண்டர்கள் அவரை சூழ்ந்துள்ளனர்.
இந்த நிலையில், மரக்கடை பகுதிக்கு காலை 10.30 மணிக்கு விஜய் பிரசாரத்தை தொடங்குவதில் தாமதம் ஏற்படும் எனத் தெரிகிறது.
மேலும், விஜய்யின் வாகனத்தை தொடர்ந்து 5 கார்கள் மட்டுமே வருவதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், நூற்றுக்கணக்கான தொண்டர்கள் கார், பைக்குகள் மூலம் அவரைத் தொடர்ந்து வருகின்றனர்.
இதனிடையே, திருச்சியில் முக்கிய பகுதியான டிவிஎஸ் டோல்கேட் உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.