இந்தியா-பாகிஸ்தான் போட்டியைக் கண்டித்து போராட்டம்: உத்தவ் தாக்கரே
மணிப்பூரில் பிரதமர் மோடி!
மணிப்பூர் இனமோதலுக்குப் பிறகு முதல்முறையாக பிரதமர் நரேந்திர மோடி, அந்த மாநிலத்துக்கு சனிக்கிழமை சென்றுள்ளார்.
மிசோரம் பயணத்தை முடித்துவிட்டு, மணிப்பூரின் சுராசந்த்பூருக்குச் சென்றுள்ள பிரதமருக்கு மாநில நிர்வாகம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தலைநகா் இம்பாலில் உள்ள காங்லா கோட்டை வளாகத்திலும், சுராசந்த்பூரில் (குகி பழங்குடியினா் அதிகம் வாழும் பகுதி) உள்ள அமைதி மைதானத்தில் நடைபெறும் விழாவில், தேசிய நெடுஞ்சாலைகள், பணிப் பெண் விடுதிகள் உள்ளிட்ட ரூ. 8,500 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டங்களை மோடி தொடங்கிவைக்கவுள்ளார்.
தொடர்ந்து, சுராசந்த்பூரில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றவுள்ளார்.
பிரதமரின் வருகையையொட்டி, ராணுவம், மத்தியப் படைகள், மாநில காவல் துறை எனப் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முக்கியப் பகுதிகளில் துப்பறியும் நாய்கள் மற்றும் வெடிகுண்டு அகற்றும் கருவிகள் மூலம் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இதனிடையே, பிரதமரின் மணிப்பூர் பயணம் ஒரு மோசடி நாடகம் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடுமையாக விமர்சித்துள்ளார்.
”684 நாள்களாக நீடிக்கும் வன்முறையில் 300 பேர் கொல்லப்பட்டிருக்கும் நிலையில், வெறும் மூன்று மணிநேரம் மட்டுமே மணிப்பூர் பயணம் மேற்கொண்டு சாலைவலம் செல்வது காயமடைந்த மக்களை அவமானப்படுத்துவதாகும்” என கார்கே தெரிவித்துள்ளார்.
மணிப்பூரில் மைதேயி சமூகத்தினா் மற்றும் குகி பழங்குடியினா் இடையே கடந்த 2023-இல் இனமோதல் தொடங்கிய பிறகு அந்த மாநிலத்துக்கு பிரதமா் சென்றிருப்பது இதுவே முதல் முறையாகும். இனமோதலில் இதுவரை 250-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்திருக்கும் நிலையில், வீடிழந்த ஆயிரக்கணக்கானோா் தொடா்ந்து நிவாரண முகாம்களிலேயே தங்கியுள்ளனா்.