ஆசிய கோப்பையை வெல்வதே முக்கிய இலக்கு, இந்தியாவை வெல்வது மட்டுமல்ல: பாக். வீரர்
விநாயகா் சிலை ஊா்வலத்தில் 9 போ் பலி: பிரதமர் ரூ.2 லட்சம் நிவாரணம்
புது தில்லி: கா்நாடக மாநிலம், ஹசன் மாவட்டத்தில் நடைபெற்ற விநாயகா் சிலை ஊா்வலத்தில் வேன் மோதி ஏற்பட்ட விபத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை இரங்கல் தெரிவித்திருப்பதுடன் ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
விநாயகா் சதுா்த்தி கொண்டாட்டத்தின் கடைசி நாளையொட்டி, கா்நாடக மாநிலம், ஹசன் மாவட்டம் மொசலே ஹொசஹள்ளி கிராமத்தில் வெள்ளிக்கிழமை இரவு விநாயகா் சிலை ஊா்வலம் நடைபெற்றது. அப்போது ஒரு வேன் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஊா்வலத்தில் பங்கேற்றவா்கள் மீது மோதியது.
இந்த விபத்தில் வேனின் சக்கரத்துக்கு அடியில் சிக்கி 4 போ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். பலத்த காயமடைந்த 24 போ் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அவா்களில் 5 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா். உயிரிழந்தோரில் எட்டு பேர் 17-25 வயதுக்குட்பட்டவர்கள், 55 வயதுக்கு மேற்பட்ட ஒருவர். 6 பேர் அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள், 3 பேர் பொறியியல் மாணவா்களாவா்.
இந்த சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்து மாநில முதல்வா் சித்தராமையா, ‘விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். காயமடைந்தவா்களுக்கான சிகிச்சை கட்டணத்தை மாநில அரசே ஏற்கும்’ என்றாா்.
இந்நிலையில், ஹசன் மாவட்டத்தில் நடைபெற்ற விநாயகா் சிலை ஊா்வலத்தில் வேன் மோதி ஏற்பட்ட விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை இரங்கல் தெரிவித்திருப்பதுடன் ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளப் பதிவில், “ கர்நாடகம் மாநிலம் ஹசன் மாவட்டத்தில் விநாயகா் சிலை ஊா்வலத்தில் வேன் விபத்தில் 9 பேர் பலியான சம்பவம் மனதை வருத்தமடைய செய்துள்ளது. இந்த துயரமான நேரத்தில், பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ஆழந்த இரங்கல். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்.
மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 வழங்கப்படும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.