திருச்சி: பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை; போக்சோ சட்டத்தில் இருவர் கைது; பி...
இழுத்தடித்த ஹைகோர்ட்; இரவோடு இரவாகத் தர்காவை இடித்த மகா அரசு; சுப்ரீம்கோர்ட் போட்ட தடை;என்ன நடந்தது?
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் ஹஸ்ரத் சாத்பீர் சயீத் பாபா என்ற தர்கா இருந்தது. இத்தர்கா சட்டவிரோதமானது என்று மும்பை உயர் நீதிமன்றம் கடந்த மாதம் 12ம் தேதி தெரிவித்து இருந்தது.
இதையடுத்து தர்காவை இடிக்கக் கடந்த ஒன்றாம் தேதி நாசிக் மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியது. தர்கா நிர்வாகம் தாங்களாகவே இரண்டு வாரத்திற்குள் இடிக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த உத்தரவுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரி தர்கா நிர்வாகம் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. ஆனால் அம்மனுவை மும்பை உயர் நீதிமன்றம் விசாரிக்காமல் இழுத்தடித்து வந்தது.
ஏப்ரல் 7ம் தேதி இம்மனுத் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அதனை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் நேரம் ஒதுக்கவில்லை.
கட்டிடங்களை இடிப்பது தொடர்பான மனுக்களாக இருந்தால் அதனை அவசர மனுவாக எடுத்துக்கொண்டு விசாரிக்க வேண்டும்.

ஆனால் உயர் நீதிமன்றம் விசாரிக்கவில்லை. இதையடுத்து தர்கா நிர்வாகம் அவசரமாக சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தது. இம்மனு சுப்ரீம் கோர்ட்டில் அடுத்த நாள் விசாரணைக்கு வருகிறது என்பதை முன்கூட்டியே தெரிந்து கொண்ட மாநகராட்சி நிர்வாகம் செவ்வாய்க் கிழமை நள்ளிரவில் திடீரென புல்டோசருடன் சென்று தர்காவை இடிக்க ஆரம்பித்தது.
இது குறித்துக் கேள்விப்பட்ட அப்பகுதி மக்கள் ஓடி வந்து தர்காவை இடிப்பதைத் தடுக்க முயன்றனர்.
ஏற்கனவே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. தர்கா இடிக்கப்படுவதைக் கண்டித்து அப்பகுதி மக்கள் கல் வீசித்தாக்கினர். இதில் 20 பேர் காயம் அடைந்தனர்.
இதையடுத்து சிறார்கள் உட்பட 30 பேர் கைது செய்யப்பட்டனர். அதிகாலை 6 மணிக்குள் தர்கா முற்றிலும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.
கொலை, கொலை முயற்சி, பொதுச் சொத்துக்குச் சேதம் ஏற்படுத்தியது தொடர்பாக 1400 பேர் மீது வழக்குப்பதிவு செய்திருப்பதாக நாசிக் போலீஸ் கமிஷனர் சந்தீப் தெரிவித்தார்.
தர்கா இடிக்கப்படுவது குறித்து சமூக வலைத்தளத்தில் செய்தியைப் பரப்பியவர்கள் அடையாளம் காணப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இச்சம்பவத்தால் நாசிக்கில் பதட்டம் நிலவியது. தர்கா நிர்வாகம் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்தபோது நாசிக் மாநகராட்சி நிர்வாகம் தர்காவை இடிக்கப் பிறப்பித்த நோட்டீஸிற்கு நீதிபதிகள் தடை விதித்தனர்.
ஆனால் சுப்ரீம் கோர்ட் விசாரித்த அன்று காலை 6 மணிக்கெல்லாம் தர்கா முழுமையாக இடிக்கப்பட்டுவிட்டது. உயர் நீதிமன்றம் தங்களது மனுவை விசாரிக்காமல் இழுத்தடித்ததாகத் தர்கா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்தார்.
இதையடுத்து மும்பை உயர் நீதிமன்ற பதிவாளர் இது தொடர்பாக விளக்கம் அளிக்க சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இது குறித்து நாசிக் மாநகராட்சி கமிஷனர் மணீஷா கூறுகையில், ''சுப்ரீம் கோர்ட் உத்தரவிடும் முன்பு சட்டவிரோத கட்டிடம் இடிக்கப்பட்டுவிட்டது. எங்களது நிலைப்பாட்டை சுப்ரீம் கோர்ட்டில் வழக்கறிஞர் மூலம் தெரிவிப்போம்'' என்று தெரிவித்தார்.

ஹஸ்ரத் சாத்பீர் சயீத் பாபா தர்கா கமிட்டி உறுப்பினர் பாஹிம் ஷேக் இது குறித்துக் கூறுகையில், ''செவ்வாய்க்கிழமை இரவு டெல்லியில் உள்ள எங்களது வழக்கறிஞருடன் நீண்ட நேரம் ஆலோசித்துவிட்டுத்தான் உறங்கச் சென்றேன். காலை 10 மணிக்குத்தான் எழுந்தேன்.
அப்போது தர்காவை இடித்து தரைமட்டமாக்கி இருந்தனர். மொபைல் போனில் ஏராளமான மிஸ்கால் மற்றும் மெசேஜ் இருந்தது. நான் வழக்கறிஞரைத் தொடர்பு கொள்ள முயன்றேன். அவர் கோர்டிற்குள் இருந்தார்.
இதனால் அவரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. எனவே விசாரணையின் போது தர்கா இடிக்கப்பட்டது குறித்துத் தெரிவிக்க முடியவில்லை. 350 ஆண்டு பழமையான தர்கா சட்டப்பூர்வமானது என்பதை நிரூபிக்க எங்களிடம் போதிய ஆவணங்கள் இருக்கிறது'' என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY