இஸ்ரேலின் தாக்குதலில் 4 குழந்தைகள் உள்பட 6 பாலஸ்தீனர்கள் பலி!
காஸாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலியாகினர்.
வடக்கு காஸாவின் ஜபாலியா பகுதியில் அப்தெல்-லத்தீஃப் அல்-குவானோவா என்பவர் தங்கியிருந்த முகாமின் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் அவர் பலியானதாக ஹமாஸ் கிளர்ச்சிப்படையின் செய்தி தொடர்பாளர் பஸெம் நயிம் தெரிவித்துள்ளார்.
இதேபோல், காஸா பகுதியின் மீதான இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் என மொத்தம் 6 பேர் பலியானதாக காஸாவின் சுகாதாரத் துறை அமைச்சகம் கூறியுள்ளது.
முன்னதாக, கடந்த வாரம் ஹமாஸுடனான போர் நிறுத்த ஒப்பந்ததை முறித்து இஸ்ரேல் ராணுவம் காஸாவின் மீது நடத்திய திடீர் தாக்குதலில் நூற்றுக்கணக்கான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். ஹமாஸ் படையிடம் மீதமுள்ள பிணைக் கைதிகளை விடுவிக்கப்படவில்லை என்றால் இந்தத் தாக்குதலானது மேலும் அதிகரிக்கக் கூடும் என இஸ்ரேல் எச்சரித்துள்ளது.
இருப்பினும், ஹமாஸ் தரப்பில் தங்களிடம் மீதமுள்ள 59 பிணைக் கைதிகள் இஸ்ரேல் படைகள் காஸாவை விட்டு வெளியேறி போர் நிறுத்தம் நீடித்தால் மட்டுமே விடுவிக்கப்படுவார்கள் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், அதில் 24 பேர் மட்டுமே தற்போது உயிரோடு இருக்கக் கூடும் என சந்தேகிக்கப்படுகின்றது.
இதையும் படிக்க: அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு! 3 குழந்தைகள் உள்பட 4 பேர் பலி!