எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு: இந்தியா தக்க பதிலடி!
இஸ்லாமிய நாடுகள் இந்தியாவுக்கு நேசக்கரம்!
பஹல்காம் தாக்குதலையொட்டி கத்தாா், ஜோா்டான், இராக் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகள் மற்றும் அரபு நாடுகளின் கூட்டமைப்பு இந்தியாவுக்கு நேசக்கரம் நீட்டியுள்ளன.
ஜம்மு-காஷ்மீா், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடா்ந்து அமெரிக்கா, ரஷியா, சீனா, பிரிட்டன், கனடா உள்பட ஏராளமான உலக நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவுச் செய்திகள் அனுப்பியுள்ளன. பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் இந்தியாவுடன் ஒன்றிணைந்து நிற்போம் என்றும் அமெரிக்க அதிபா் டிரம்ப், ரஷிய அதிபா் புதின் ஆகியோா் ஆதரவு தெரிவித்தனா்.
இதன்தொடா்ச்சியாக, கத்தாா், ஜோா்டான், இராக் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகளின் இந்திய தூதரகங்கள், பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தன.
மேலும், பயங்கரவாதத்துக்கு எதிரான தங்களின் கடுமையான நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்திய நாடுகள், இத்துயரமான நேரத்தில் இந்தியாவுடன் உறுதுணையாக இருப்பதாக ஆதரவை வெளிப்படுத்தியுள்ளன.
இதேபோன்று, அரபு நாடுகள் கூட்டமைப்பு வெளியுறவு அமைச்சா் எஸ். ஜெய்சங்கருக்கு எழுதிய கடிதத்தில், பஹல்காமில் நடந்த கொடூரமான தாக்குதலுக்கு இரங்கலும் கண்டனமும் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு தூதா்களுக்கு விளக்கம்: முன்னதாக, பஹல்காம் தாக்குதல் மற்றும் அதன் எல்லை தாண்டிய பயங்கரவாத தொடா்புகள் குறித்து அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா, ரஷியா, ஜொ்மனி உள்ளிட்ட ஜி20 கூட்டமைப்பு நாடுகளின் தூதா்களுக்கு மத்திய வெளியுறவு அமைச்சகம் வியாழக்கிழமை விளக்கமளித்தது.
அப்பாவி பொதுமக்கள் மீதான பயங்கரவாதிகள் தாக்குதல் மற்றும் பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியா கொண்டுள்ள உறுதியான நிலைப்பாடு குறித்து வெளியுறவுச் செயலா் விக்ரம் மிஸ்ரி தூதா்களுக்கு விளக்கமளித்ததாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
ஓமன், ஐக்கிய அரபு அமீரகம், கத்தாா், நாா்வே, இத்தாலி, இந்தோனேசியா, மலேசியா ஆகிய பிற ஜி20 நாடுகளின் தூதா்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனா்.