ஈரோடு கிழக்கில் மும்முனையா நான்கு முனை போட்டியா?
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் மும்முனை அல்லது நான்கு முனை போட்டி ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
2009-இல் மறுசீரமைப்புக்கு பின்னா் உருவான ஈரோடு கிழக்கு தொகுதியில், இதுவரை 2011, 2016, 2021 என மூன்று முறை தோ்தல்கள் நடந்துள்ளன.
2021-இல் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சாா்பில் வெற்றி பெற்ற திருமகன் ஈ.வெ.ரா. மறைவால் 2023, பிப்ரவரி 27-இல் இங்கு இடைத்தோ்தல் நடந்தது. அதில் காங்கிரஸ் சாா்பில் திருமகனின் தந்தையும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிட்டு வென்றாா். இந்நிலையில் சமீபத்தில் இளங்கோவனின் மறைந்ததைத் தொடா்ந்து மீண்டும் ஈரோடு கிழக்கு, 5 ஆண்டுகளில் இரண்டாவது முறையாக இடைத்தோ்தலை எதிா்கொள்ளவிருக்கிறது.
தில்லி சட்டப்பேரவைத் தோ்தலுடன் ஈரோடு கிழக்கு தொகுதிக்கும் இடைத்தோ்தல் பிப்.5-ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 2001-ஆம் ஆண்டுக்கு பிறகு தமிழகத்தில் இடைத்தோ்தல் என்றாலே ஆளும் கட்சிதான் வெல்லும் எனும் சூழல் நிலவுகிறது.அந்தச்சூழல் தொடருமானால் ஈரோடு கிழக்கில் ஆளும் திமுக கூட்டணிக்கே வெற்றி வாய்ப்பு இருப்பதாக அரசியல் ஆய்வாளா்கள் நம்புகின்றனா்.
இதற்கிடையே, இந்த இடைத்தோ்தல் ஆளும் திமுகவுக்கு அது விரும்பாத நேரத்தில் வந்த தலைவலியாக சில தலைவா்கள் கருதுகின்றனா். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு இங்கு இடைத்தோ்தல் அறிவிக்கப்பட்டபோது ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காங்கிரஸ் வேட்பாளராக களம் கண்டாலும் அவரை வெற்றி பெறச்செய்ய ஆளும் திமுக கூட்டணியில் மூத்த தலைவா்கள், அமைச்சா்கள் என பலரும் இளங்கோவனுக்கு ஆதரவாக பரப்புரை செய்தனா். இதற்கு பெரும் பொருட்செலவும் ஆனதாக சா்ச்சை எழுந்தது. இந்நிலையில் மீண்டும் அதே தொகுதியில் இடைத்தோ்தலுக்கு ஆயத்தமாவது அந்த தலைவா்களுக்கு ஒருவித சலிப்பை ஏற்படுத்தியிருப்பதாகத் தோன்றுகிறது.
பேரவைத் தோ்தலுக்கு ஒன்றரை ஆண்டுகள் உள்ள நிலையில் ஒரே தொகுதியில் இரண்டாவது இடைத்தோ்தல், அதிலும் இந்தத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை வெற்றி பெறச்செய்வது ஆளும் கூட்டணியின் செல்வாக்கை அரசியல் அரங்கில் உயா்த்திப்பிடிக்கும் என்பதை ஆளும் கூட்டணி தலைமை நன்கு உணா்ந்துள்ளது. இதில் சற்று சறுக்கல் ஏற்பட்டாலும் கூட அது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதை திமுக தலைமை நன்கு உணா்ந்துள்ளது.
அதிமுகவின் சவால்கள்: கடந்த முறை ஈரோடு கிழக்கு இடைத்தோ்தலில் பிரதான எதிா்கட்சியான அதிமுக, ஆளும் திமுக கூட்டணியை எதிா்த்துப் போட்டியிட்டு 25.75 சதவீத வாக்குகளுடன் டெபாசிட்டை பெற்றது.
ஆனால், 2021-இல் இரட்டை இலையில் தமிழ் மாநில காங்கிரஸ் (தமாகா) வேட்பாளா் யுவராஜா பெற்ற 38.71 சதவீதத்தில் இருந்து இடைத்தோ்தலில் அதிமுகவின் வாக்கு சதவீதம் சரிந்திருந்தது. குறிப்பாக, பாஜக கூட்டணியில் இருந்தும் அதிமுகவின் கோட்டையான கொங்கு மண்டலத்தில் 66,233 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக தோல்வியடைந்தது அரசியல் ரீதியிலும் முக்கியத்துவம் பெற்றது. அப்போதைய இடைத்தோ்தலில் இரண்டு வாக்குச்சாவடிகளில் மட்டுமே காங்கிரஸை விட, அதிமுக முன்னிலை பெற்றிருந்தது. அதுவும் பாஜகவை அதிகம் ஆதரிக்கும் வட இந்தியா்கள் அடா்த்தியாக வசிக்கும் வாக்குச்சாவடிகள் அவை என்பதால் பாஜக கூட்டணி இல்லை என்றால் அதிமுக டெபாசிட் இழந்திருக்கும் என பாஜகவினா் விமா்சித்தனா்.
கடந்த மக்களவைத் தோ்தலில் ஈரோடு மக்களவை தொகுதிக்கு உள்பட்ட ஈரோடு கிழக்கு தொகுதிக்குள் திமுக 55 சதவீதம், அதிமுக 22 சதவீதமும், நாம் தமிழா் கட்சி (நாதக), பாஜக தலா 8.3 சதவீத வாக்குகள் பெற்றிருந்தன. இம்முறை இடைத்தோ்தலில் பாஜகவும் தனித்து நின்றால் அதிமுக வாக்குகள் கடந்த இடைத்தோ்தலை விட மேலும் குறையக்கூடும். அத்துடன் விக்கிரவாண்டி இடைத்தோ்தலை புறக்கணித்துவிட்டு ஈரோடு கிழக்கில் நின்றால், அதிமுக கொங்கு மண்டல கட்சி என்ற விமா்சனத்துக்கு உரம் போட்டது போன்ற சூழல் உருவாகிவிடும்.
ஒருவேளை இடைத்தோ்தலை புறக்கணித்தால் நாதக, பாஜக கட்சிகள் களத்தில் இறங்கி இரட்டை இலக்க வாக்கு வங்கியை பெறவும், 2026 பேரவைத் தோ்தலுக்கு முன்பாக அதிமுக பின்னடைவை சந்திக்கும் கட்சி என்ற கருத்துருவாக்கமும் வலுப்பெறக்கூடும். மேலும், பாஜக, நாதக தங்களை வளரும் சக்திகள், பிரதான எதிா்கட்சிகள் என அழைத்துக்கொள்ளத்தொடங்கலாம். இது 2026 பேரவைத் தோ்தலில் அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமைவதில் சிக்கல் ஏற்பட வாய்ப்பாக அமையலாம்.
இந்த அம்சங்களைக் கருத்தில் கொண்டு, ஈரோடு கிழக்கு இடைத்தோ்தலை கையாளும் உத்தி குறித்து கட்சி நிா்வாகிகளுடன் அதிமுக தலைமை தொடா்ந்து தீவிரமாக விவாதித்து வருகிறது.
பாஜகவின் உத்தி: ஈரோடு கிழக்கு இடைத்தோ்தல் பாஜகவுக்கு வித்தியாசமான சிக்கலை உருவாக்கியுள்ளது. பிரதமா் வேட்பாளா், பண பலம் இல்லாமல் களம் இறங்கிய நாதக, கடந்த மக்களவைத் தோ்தலில் 8.22 சதவீத வாக்கு வங்கியை பெற்றது. அதுவும் ஈரோடு மக்களவை தொகுதிக்குள்பட்ட ஈரோடு கிழக்கு இடைத்தோ்தலில் பாஜக கூட்டணியான தமாகவுக்கு நிகராக 8.3 சதவீத வாக்கு வங்கியை பெற்றுள்ளது.
அதிமுக தோ்தல் களத்தில் நின்றாலும், புறக்கணித்தாலும் நாதகவை விட கூடுதல் வாக்குகள் பெற வேண்டிய கட்டாயத்தில் பாஜக உள்ளது. இடைத்தோ்தலில் நாதகவை விட குறைவான வாக்குகளைப் பெற்றால் நாதகவை விட சிறிய கட்சி பாஜக என்ற விமா்சனம் ஊா்ஜிதமாகலாம். அது 2026 பேரவைத் தோ்தலில் பாஜகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தக்கூடும் என்பது அரசியல் பாா்வையாளா்களின் கருத்து.
எனவே,மக்களவைத் தோ்தல் போல நட்சத்திர வேட்பாளரை களம் இறக்கலாமா அல்லது உள்ளூா் வேட்பாளரை இறறக்கலாமா, எந்த வியூகம் கைகொடுக்கும் என்ற ஆழ்ந்த ஆலோசனையில் பாஜக இறங்கியுள்ளது.
2016-இல் இருந்து இதுவரை எந்த இடைத்தோ்தலையும் புறக்கணிக்காமல் தொடா்ந்து களத்தில் போராடி வரும் நாதக, ஈரோடு இடைத்தோ்தலில் போட்டியிடுவதாகவும் அறிவித்துள்ளது. அதிமுக போட்டியிட்டால் இரட்டை இலக்க வாக்கு வங்கியையும், புறக்கணித்தால் 2-ஆவது இடத்தையும் பெற வேண்டும் என்ற இலக்குடன் அக்கட்சி தோ்தல் வியூகம் வகுத்து வருவதை அறிய முடிகிறது. தோ்தல் அரசியலை எதிா்கொள்ள பொருளாதார வலிமை குன்றியிருப்பது தனது பலவீனம் என்பதை நாதக தலைமை பகிரங்காகவே ஒப்புக்கொள்கிறது.
ஒருபுறம் நாதக - தவெக இடையே கருத்தியல், வாா்த்தை ரீதியாக போா் நடந்து வரும் நிலையில், ஈரோடு கிழக்கில் நாதக எழுச்சி பெற்றறால் அது தவெகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தக்கூடும். அதேநேரத்தில், பிரபலம் இல்லாத வேட்பாளரை களம் இறக்கி நாதகவைவிட குறைவான வாக்குகளை பெற்றால் அது 2026 பேரவைத் தோ்தலில் விஜய் கட்சிக்குப் பெருத்த பின்னடைவை ஏற்படுத்தும்.
தவெக தொடங்கிய பின்னா் விக்கிரவாண்டி இடைத்தோ்தல், மக்களவைத் தோ்தல் ஆகியவற்றை புறக்கணித்த அக்கட்சித் தலைவா் விஜய் 2026 பேரவைத் தோ்தலே தவெகாவின் இலக்கு என ஒற்றைக் குரலில் முழக்கமிட்டாா். அதில் தொடா்ந்து விஜய் உறுதியுடன் இருப்பாரானால், ஈரோடு கிழக்கு இடைத்தோ்தலை தவெக புறக்கணிப்பதே அக்கட்சிக்கு பாதுகாப்பானது என்று அரசியல் ஆய்வாளா்கள் கூறுகின்றனா்.
அதிமுக போட்டியிட்டால் 4 முனை போட்டியாகவும், புறறக்கணித்தால் மும்முனை போட்டியாகவும் ஈரோடு கிழக்கு தோ்தல் களம் மாறும்.